MAP

இரஷ்ய தாக்குதலில் சிதிலமைடைந்த உக்ரைன் கட்டிடம் இரஷ்ய தாக்குதலில் சிதிலமைடைந்த உக்ரைன் கட்டிடம்   (ANSA)

இரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய திருத்தந்தை!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இரஷ்ய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார்.

சுஜிதா சுடர்விழி - வத்திக்கான் 

ஜூன் 4, இப்புதன்கிழமையன்று,  திருத்தந்தை பதினான்காம்  லியோ அவர்கள் இரஷ்ய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார் என்று செய்தியாளர்களிடம் கூறினார் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புருனி.

இந்த உரையாடலின்போது, உக்ரைனில் இடம்பெற்றிக்கொண்டிருக்கும் போரை  முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், தேவையான இடங்களில் அடிப்படை மனிதாபிமான உதவிகளை வழங்குவதன் அவசியம் குறித்தும் அவர்கள் விவாதித்தனர் என்று மேலும் தெரிவித்தார் புருனி

அத்துடன் இருநாடுகளுக்கும் இடையே நேர்மறையான தொடர்புகளை உருவாக்குவதற்கும், வன்முறைக்குத் தீர்வு காண்பதற்கும், உரையாடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அமைதிக்கு சாதகமான ஒரு வழியை  இரஷ்யா எடுக்க வேண்டும் என்றும் திருத்தந்தை வேண்டுகோள் விடுத்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த உரையாடலின்போது கைதிகள்  பரிமாற்றத்திற்கான தொடர்ச்சியான முயற்சிகள் நடந்தேறி வருவதாகவும் மற்றும் போலோஞ்னா உயர்மறைமாவட்டத்தின் பேராயரும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் மத்தேயு சூப்பி அவர்கள் இந்த விடயத்தில் செய்து வரும் சிறப்பான பணி குறித்தும் விவாதித்தனர் என்றும் அந்த அறிக்கைத் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை கிரில் அவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் என்றும்,  மேலும் பகிரப்பட்ட கிறிஸ்தவ விழுமியங்கள் எவ்வாறு அமைதியைத் தேடவும், வாழ்க்கையைப் பாதுகாக்கவும், உண்மையான மதச் சுதந்திரத்தைத் தொடரவும் உதவும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார் என்றும்,   புருனி செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஜூன் 2025, 14:31