MAP

திருத்தந்தையுடன் இத்தாலிய அரசுத் தலைவர் செர்ஜோ மத்தெரெல்லா திருத்தந்தையுடன் இத்தாலிய அரசுத் தலைவர் செர்ஜோ மத்தெரெல்லா   (ANSA)

திருத்தந்தையைச் சந்தித்தார் இத்தாலிய அரசுத் தலைவர் மத்தெரெல்லா!

இத்தாலிய அரசுத் தலைவர் செர்ஜோ மத்தெரெல்லா அவர்கள், தனது குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களைச் சந்தித்தார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கைத் தெரிவிக்கிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜூன் 6, வெள்ளிக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை, இத்தாலிய அரசுத் தலைவர் செர்ஜோ மத்தெரெல்லா அவர்கள் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் என்று கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.  

ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக இடம்பெற்ற இச்சந்திப்பிற்குப் பின், திரு. மத்தெரெல்லா அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் துணைச் செயலர் பேரருள்திரு Mirosław Wachowski அவர்களையும் சந்தித்து உரையாடினார் என்றும் தெரிவிக்கிறது அதன் அறிக்கை.

திருப்பீடச் செயலகத்தில் இடம்பெற்ற சுமுகமான இந்த உரையாடலின் போது, ​​இத்தாலிக்கும் திருப்பீடத்திற்கும் இடையேயான நல்லுறவுகளுக்காக நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது என்று மேலும் உரைக்கிறது அவ்வறிக்கை.

மேலும் இந்தச் சந்திப்பின்போது, அனைத்துலகளவில், குறிப்பாக, உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன என்றும் அதன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இத்துடன் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் குறித்தும், குறிப்பாக, நாட்டின் வளர்ச்சிக்குத் திருஅவையின் பங்களிப்பு குறித்தும் உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று சுட்டிக்காட்டியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஜூன் 2025, 15:25