MAP

ஆயர்களுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ ஆயர்களுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ   (ANSA)

மேய்ப்புப்பணிக்கான விவேகமுடன் செயல்படுங்கள்!

ஆயர்கள் தங்கள் ஆளுகைக்கீழுள்ள அருள்பணியாளர்களுக்கு உண்மையுள்ள தந்தையர்களாகவும் சகோதரர்களாகவும் இருக்கவும், திருஅவைக்குள் ஒன்றிப்பை வளர்க்கவும் ஊக்குவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“மேய்ப்புப்பணிக்கான விவேகம் என்பது ஓர் ஆயரை அவரது முடிவுகளிலும், நிர்வாகத்திலும், விசுவாசிகளுடனான உறவுகளிலும், அவர்தம் அமைப்புகளிலும்  வழிநடத்தும் நடைமுறை ஞானமாகும்” என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூன் 25, புதன்கிழமை, உரோமைக்கு யூபிலி திருப்பயணம் மேற்கொண்ட ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, ஓர் ஆயர் மற்றவர்களுடனான உறவுகளிலும், பங்கேற்பு அமைப்புகளுக்குத் தலைமை தாங்குவதிலும், உரையாடலை ஒரு பாணியாகவும் முறையாகவும் பயன்படுத்துவது அவரது விவேகத்தின் தெளிவான அறிகுறியாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக அவர்களை அன்புடன் வரவேற்ற திருத்தந்தை, மேய்ப்பர்களாகப் பணியேற்பதற்கு முன்பு, அவர்கள்  கிறிஸ்துவின் மந்தையின் ஒரு பகுதியாக இருந்தனர் என்பதை அவர்களுக்கு எடுத்துக்காட்டியதுடன்,  யூபிலி ஆண்டின் உணர்வை உள்ளடக்கிய "எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது" (உரோ 5:5) என்ற மறைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை மனதில்கொண்டு, கிறிஸ்துவின் வழியாகத் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அவர்களை வலியுறுத்தினார்.

எதிர்நோக்கின்  சாட்சிகள்:

குறிப்பாக, நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில், துன்புறுவோரின் நம்பிக்கையை மீண்டும் தூண்டும் விதமாக, கடவுள் மற்றும் தூய ஆவியாரின் வல்லமையில் நம்பிக்கைக்கொண்டு ஆயர்கள் எதிர்நோக்கை வெளிப்படுத்தும் விதமாக மறையுரை ஆற்ற வேண்டும் என்று அவர்களிடத்தில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

ஒன்றிப்பு மற்றும் பணி

ஆயர்கள், தங்கள் தலத்திருஅவைகளில் ஒன்றிப்பினால் வெளிப்படும் அடையாளங்களாக, இறை அருளால் தூண்டப்பெற்று, நற்செய்தி பரவலுக்கான ஒற்றுமையை வளர்க்கவும், பன்முகத்தன்மை கொண்ட கொடைகளை நிலைநிறுத்தவும் அழைக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.  

இறையியல் வாழ்க்கை:

ஆயர்கள் ஆழ்ந்த நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் பிறரன்புப் பணிகளில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், மோசேயைப் போலவே, அவர்கள் தங்கள் மக்களுக்காக விடாமுயற்சியுடன் கடவுளிடத்தில் பரிந்து பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

ஆயர்கள் எளிதான பதில்கள் மூலம் அல்ல, மாறாக தங்களின் உடனிருப்பு மற்றும் ஒன்றிப்பின் வழியாக மக்களுக்கு, அதிலும் குறிப்பாக, துயருறும் மக்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறார்கள் என்று மொழிந்த திருத்தந்தை, ஆயர்களின் வாழ்க்கை மேய்ப்புப் பணிகள் வழியாக ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்றும், எல்லா செயல்களிலும் கிறிஸ்துவின் அன்பைப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அத்தியாவசிய நற்பண்புகள்:

ஆயர்கள் விவேகமுடன் தலைமைத்துவம், உரையாடல் மற்றும் ஒன்றிணைந்து பயணித்தலில் (synodality) பயிற்சி செய்தல் வேண்டும் என்றும், செல்வப்பற்று மற்றும் ஒருதலைப் பற்றிலிருந்து விலகி எளிமையாகவும் தாராள மனதுடனும் வாழ்வது அவசியம் என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

ஏழ்மை மற்றும் கற்பு

இறையாட்சிக்கு நேர்மையுடன் சான்றுபகர்ந்து வாழ்வதும், குறிப்பாக, பாலியல் முறைகேடுகள் சம்மந்தமான காரியங்களில் உண்மையுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்ளுமாறும் அவர்களிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மனித நற்பண்புகளான நீதி, நேர்மை, பரிவிரக்கம், பொறுமை, விவேகம் மற்றும் செவிமடுக்கும் இதயத்தை வளர்ப்பது முதன்மையானது என்பதையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஜூன் 2025, 14:07