வத்திக்கான் வானொலி ஒலிபரப்பு மையத்திற்கு திருத்தந்தை வருகை
சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்
ஜூன் 25-ஆம் தேதி வியாழக்கிழமை காலை, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வத்திக்கான் தொடர்புத் துறையின் ஒரு பகுதியாகக் கருதப்படும் வத்திக்கான் வானொலியின் சிற்றலைகள் மூலம் ஒலிபரப்புச் செய்யப்படும் கூடம் அமைந்துள்ள சாந்தா மரியா தி கலேரியா என்ற இடத்திற்கு சென்று, அங்கு தனது 43-ஆம் ஆண்டு குருத்துவ அருள்பொழிவு நிறைவைக் குறிக்கும் ஒரு சிறிய வரவேற்பு நிகழ்ச்சியில் அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துகொண்டார்.
புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் பியர் லூய்கி நெர்வி வடிவமைத்த சிற்றலை ஒலிபரப்புக் கட்டிடத்தை திருத்தந்தை பார்வையிட்டதுடன், அங்குள்ள மையத்தின் பணியாளர்களை சந்தித்து உரையாடினார்.
1957-ஆம் ஆண்டு திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ் அவர்களால் இந்த ஒலிபரப்புக் கூடம் திறக்கப்பட்டது, சாந்தா மரியா தி கலேரியா பகுதிக்கு 1991-ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் கடைசியாக வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் தனது மறைப்பரப்பு பணியின் போது, வத்திக்கான் வானொலியின் சிற்றலை ஒலிபரப்புகளைப் பெறுவது விலைமதிப்பற்றது என்றும், இது கடினமான இடங்களில் சில ஒலிபரப்பாளர்கள் மட்டுமே ஒலிபரப்பு செய்து மக்களை சென்று அடையச் செய்வது மற்றும் இது தகவல்தொடர்புகளின் மறைப்பரப்பு பணியின் மதிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பின்னர், அங்கிருந்த அனைவருக்கும் திருத்தந்தை தனது ஆசீரை அளித்து, இன்றைய கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்த திருவிழா(Corpus Christi) நாள்களிலும் உண்மையுடனும் தொடர்ச்சியுடனும் செய்யப்படும் பணிக்கு நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்