MAP

போதைப்பொருள் ஒழிப்பு தின விழாவின் பங்கேற்பாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை போதைப்பொருள் ஒழிப்பு தின விழாவின் பங்கேற்பாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை   (ANSA)

போதைப்பொருள் ஒழிப்பு தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி!

அனைத்துலக இளையோரே, புதிய, நீதியான மனிதகுலத்தை உருவாக்குவதில் நீங்கள் பார்வையாளர்களாக அல்ல, தீவிர பங்கேற்பாளர்களாக இருக்க அழைக்கப்படுகிறீர்கள் : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“அன்புள்ள இளைஞர்களே, நமது பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கு மிகவும் அவசரமாகத் தேவைப்படும் புதுப்பித்தலில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல, கதாநாயகர்கள்” என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூன் 26, வியாழக்கிழமை, கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக போதைப்பொருள் ஒழிப்பு தின விழாவின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து வழங்கிய சிறப்புச் செய்தி ஒன்றியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, “தீமையிலிருந்து விலகி நிற்பவர்கள் வழியாக கடவுள் பெரிய காரியங்களைச் செய்கிறார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னிப்பு, அமைதி மற்றும் தூய ஆவியார்

கடின உழைப்பு மற்றும் நம்பிக்கை வழியாக வரும் மனித மாண்பு மற்றும் நம்பிக்கையை அங்கீகரிப்பதில் கவனம் செலுத்தும் இந்த யூபிலி ஆண்டிற்கு அனைவரையும் வரவேற்றுள்ள திருத்தந்தை, “இது இயேசு தம்முடைய சீடர்களுக்கு அளித்த உயிர்ப்பு தின வாழ்த்துச் செய்தியை நினைவுபடுத்துகிறது” என்றும், “இயேசு துயரத்திலும் சிறைப்படுத்தப்பட்ட வேளையிலும் கூட மன்னிப்பு, அமைதி மற்றும் தூய ஆவியாரைக்  கொண்டு வருகிறார்” என்றும் மொழிந்துள்ளார்.

போதைப் பழக்கத்தை ஒரு கண்ணுக்குத் தெரியாத சிறைச்சாலையின் வடிவமாகப் பிரதிபலித்துள்ள திருத்தந்தை, “சுதந்திரம் என்பது ஓர் உலகளாவிய அழைப்பு” என்றும், “உண்மையான அமைதியும் மகிழ்ச்சியும் ஒன்றிப்பு மற்றும் நம்பிக்கை நிறைந்த உறவுகள் வழியாக ஒன்றிணைந்து காணப்படுகின்றன” என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

உள்ளடக்கமும் நம்பிக்கையும்

“போதை மற்றும் ஓரங்கட்டப்படுதலுக்கு எதிரானப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றும், “அது வலிமை வாய்ந்த குற்றவியல் வலைப்பின்னல்களையும் சமூக புறக்கணிப்பையும் எதிர்கொள்ள வேண்டும்” என்றும் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, “ஓரங்கட்டப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக, சமூகம் உள்ளடக்கத்தையும் (அனைவரையும் உள்ளடக்கிய) நம்பிக்கையையும் வளர்க்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆன்மிக மற்றும் சமூகப் புதுப்பித்தல்

“ஆன்மிக மற்றும் சமூகப் புதுப்பித்தலை இணைக்கும் சந்திப்பு, நீதி மற்றும் செல்வத்தை மறுபகிர்வு செய்யும் கலாச்சாரத்திற்கு யூபிலி ஆண்டு அழைப்பு விடுக்கிறது” என்றும், “போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிரானப் போராட்டம் சவாலானது மற்றும் ஆபத்தானதும் கூட” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

பங்கேற்பாளர்களாக இருங்கள்

“புதிய, நீதியான மனிதகுலத்தை உருவாக்குவதில் இளைஞர்கள் தீவிர பங்கேற்பாளர்களாக இருக்க அழைக்கப்படுகிறார்கள்” என்றும், “அவர்களின் அனுபவங்களும் மீள்தன்மையும் மாற்றத்திற்கு இன்றியமையாதவை” என்றும் கோடிட்டுக்காட்டியுள்ள திருத்தந்தை, “சார்புநிலையை வென்று மனித மாண்பை மீட்டெடுக்க திருஅவை, சமூகம், கல்வி மற்றும் அரசியலுக்கு அவர்களின் ஆற்றலும் சான்று வாழ்வும் தேவை” என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

குணப்படுத்துதல், கல்வி மற்றும் உள்ளடக்கம் (அனைவரையும் உள்ளடக்கிய) ஆகியவற்றிற்கான அதிக இடங்களை உருவாக்குவதற்கான அழைப்புபொன்றையும் விடுத்துள்ள திருத்தந்தை, அனைவரையும் தூய கன்னி மரியாவின் பராமரிப்பில் ஒப்படைத்து அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி அனைத்துலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்திற்கான செய்தியை நிறைவுசெய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஜூன் 2025, 14:33