MAP

திருத்தந்தையின் ஜூன் மாத செபக் கருத்து : 'உலகம் இரக்கத்தில் வளரட்டும்'

பாரம்பரியமாக இயேசுவின் திருஇதயப் பக்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜூன் மாதத்திற்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் மாதாந்திர செபக் கருத்து, "உலகம் இரக்கத்தில் வளர வேண்டும்" என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“நாம் ஒவ்வொருவரும் இயேசுவுடனான தனிப்பட்ட உறவில் ஆறுதலைக் காணவும், அவரது இதயத்திலிருந்து உலகத்தின் மீது இரக்கம் காட்டக் கற்றுக்கொள்ளவும் இறைவேண்டல் செய்வோம்” என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூன் 3, இச்செவ்வாயன்று வழங்கியுள்ள ஜூன் மாதத்திற்கான செபக்கருத்து அடங்கிய காணொளி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இறைவேண்டலுடன் தனது செபக் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“என் இதயத்தை பற்றியெரியச் செய்யும் வார்த்தைகளைக் கொண்ட உம் மென்மையான இதயத்தை நோக்கி இன்று வருகிறேன்.

மிகச் சிறியோர்கள் மீதும் ஏழைகள் மீதும், பாதிக்கப்படுபவர்கள் மீதும், மனிதத் துயரங்கள் அனைத்தின் மீதும் இரக்கத்தைப் பொழியும் உம்மை நோக்கி வருகிறேன்.

நான் உம்மை மேலும் அறிய விரும்புகிறேன், நற்செய்தியில் உம்மை தியானிக்க விரும்புகிறேன்,

உம்முடன் இருக்கவும், உம்மிடமிருந்து கற்றுக்கொள்ளவும் மற்றும் எல்லா வகையான ஏழ்மையிலும் தொடப்பட நீர் அனுமதித்த தொண்டிலிருந்தும் நான் உம்மை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

நீர் உம்முடைய தெய்வீக மற்றும் மனித இதயத்தினால் எங்களை அளவில்லாமல் அன்புகூர்வதன் வழியாக இறைத்தந்தையின் அன்பை எங்களுக்குக் காட்டினீர்.

உம்முடைய பிள்ளைகள் அனைவருக்கும் உம்மைச் சந்திக்கும் அருளை அளித்தருளும்.

எங்கள் திட்டங்களை மாற்றவும், வடிவமைக்கவும், உருமாற்றவும், அதனால் நாங்கள் இறைவேண்டல், அன்றாடப் பணிகள், சந்திப்பு ஆகிய எல்லாச் சூழ்நிலைகளிலும் உம்மை மட்டுமே தேடுவோமாக!

இந்தச் சந்திப்பிலிருந்து, எங்களை உலகத்திற்கான இரக்கத்தின் ஒரு பணிக்காக அனுப்பும். அதிலிருந்துதான் எல்லா ஆறுதலும் பெருகும். நீரே அந்த ஆறுதலின் ஊற்றாக விளங்குகின்றீர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஜூன் 2025, 13:32