குருத்துவப் பணிக்கான உருவாக்கப் பயிற்சி என்பது உறவுக்கான ஒரு பயணம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“கிறிஸ்துவின் நண்பர்களாக மாறுவது என்பது திறமைகளில் மட்டுமல்ல, உறவிலும் உருவாகுவதாகும்” என்றும், “அருள்பணித்துவ வாழ்விற்கான உருவாக்கப் பயிற்சி என்பது அறிவைப் பெறுவது மட்டுமல்ல; இதயம், மனம், சுதந்திரம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய முழு ஆளுமையையும் கொண்டு, இறைவனுடன் நெருங்கிய நட்பை ஏற்படுத்தும் ஒரு பயணமாகும்” என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூன் 26, இவ்வியாழக்கிழமையன்று, அருள்பணியாளர்கள், அருள்பணித்துவத்திற்கான உருவாக்கப் பயிற்சியாளர்கள், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள், இறையழைத்தல் ஊக்குநர்கள் ஆகியோரை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, “கிறிஸ்துவுடனான நட்பின் வழியாக மகிழ்ச்சியான அருள்பணியாளர்களாக நாம் வாழ முடியும்” என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அருள்பணியாளர்களுக்கு அருள்பணித்துவ வாழ்வின் அடித்தளமாக கிறிஸ்துவுடனான நட்புதான் அமைந்துள்ளது என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மூன்று முக்கிய காரியங்களை அவர்களுக்கு விவரித்தார்.
முதலாவதாக, அருள்பணித்துவத்திற்கான உருவாக்கப் பயிற்சி என்பது வெறும் கல்வி சார்ந்த பயணமாக இல்லாமல், உறவு சார்ந்த பயணமாக இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்கினார் திருத்தந்தை.
இரண்டாவதாக, அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களிடையே உடன்பிறந்த உறவு மிகவும் ஆழமாக வளர வேண்டும் என்று கூறி அவர்களை ஊக்குவித்தார் திருத்தந்தை.
மன்றாவதாக, ஒன்றிணைந்து அன்புகூரும், செவிமடுக்கும், இறைவேண்டல் செய்யும் மற்றும் பணியாற்றும் மனிதர்களை உருவாக்க வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
நெருக்கடியின் மத்தியில் கடவுளின் அழைப்பு
அருள்பணித்துவத்திற்கான உருவாக்கப் பயிற்சியாளர்களின் சான்று வாழ்வின் முக்கியத்துவம், இறையழைத்தல்களை வளர்க்கும் சூழல்களின் தேவை மற்றும் இளையோர் பணியின் தொடர்ச்சியான பொருத்தத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டிய திருத்தந்தை, நெருக்கடியின் மத்தியிலும், கடவுள் தொடர்ந்து அவரது பணிக்காக அழைக்கிறார் என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.
இயேசுவின் திருஇதயத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை, அருள்பணியாளர்கள் தங்கள் நற்செய்திப் பணி ஆர்வத்தைப் புதுப்பித்துக்கொண்டு, குறிப்பாக, ஏழைகள், காயமடைந்தவர்கள் மற்றும் தொலைதூரத்தில் உள்ளவர்கள் மீது கிறிஸ்துவின் அன்பைப் பிரதிபலிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இறுதியாக, அருள்பணியாளர்களின் அர்ப்பணம் நிறைந்த பணிகளுக்காக நன்றி தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, “ஓர் அருள்பணியாளராக இருப்பது மிகவும் அழகானது, அவர்கள் நிறைவானவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக அவர்கள் கிறிஸ்துவின் நண்பர்கள் மற்றும் அன்னை மரியாவின் பிள்ளைகள் என்பதற்காகத்தான்” என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டியதுடன் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அவர்களுக்கு வழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்