தனது குருபட்ட நாளைச் சிறப்பிக்கும் திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜூன் 19, வியாழக்கிழமை, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தனது 43-வது குருபட்ட நாளைச் சிறப்பிக்கும் இந்நாளில் அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
Robert F. Prevost என்ற இயற்பெயர் கொண்ட திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கடந்த 1982-ஆம் ஆண்டு, ஜூன் 19-ஆம் தேதி அகுஸ்தீன் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணியாளராக உரோமையிலுள்ள புனித மோனிக்கா கோவிலில் திருநிலைப்படுத்தப்பட்டார்.
அருட்தந்தை இராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் அவர்கள் (திருத்தந்தை) அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு 27 வயது என்றும், அவர் உரோமையிலுள்ள புனித தாமஸ் அக்குவினாஸ் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டம் பயின்றார் என்றும் திருத்தந்தை குறித்து இன்றைய நாளில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருப்பீடச் சமூகத்தொடர்புத் துறையின் செய்திப் பிரிவுத் தலைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.
மேலும் 1981-ஆம் ஆண்டில் தனது இறுதி அர்ப்பணத்தை (வார்த்தைப்பாடுகள்) புனித அகுஸ்தீன் சபையில் வழங்கினார் என்றும், 1985-ஆம் ஆண்டில், அவர் பெருவிற்கு ஒரு மறைப்பணியாளராக அனுப்பப்பட்டு, பியூரா பகுதியில் உள்ள சுலுகானாஸின் பணித்தளத்தில் பணியாற்றினார் என்றும் தனது கட்டுரையில் கூறியுள்ளார் தொர்னியெல்லி.
"அன்புள்ள குருக்களே, இயேசுவைப் பின்பற்றுங்கள்!. கடவுளுக்கு உரியவர்களாக இருப்பது நம்மை இம்மண்ணக மக்களுடன் இணைக்கிறது. ஓர் உண்மையான உலகத்துடன். இயேசுவைப் போலவே, இறைத்தந்தை உங்கள் பாதையில் வைக்கும் உண்மையான மக்களை நீங்கள் சந்திக்கிறீர்கள்" என்றும் கடந்த மே மாதம் 31-ஆம் தேதி புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த குருபட்ட திருப்பலியில் வழங்கிய மறையுரையில் திருத்தந்தை கூறியதையும் நினைவுகூர்ந்துள்ளார் தொர்னியெல்லி.
திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
இயேசுவின் திருவுடல் மற்றும் திருஇரத்தப் பெருவிழா தோற்றத்தில் நம்மிடையே உண்மையிலேயே பிரசன்னமாயிருக்கும் அவரின் மீதான நமது நம்பிக்கையைப் புதுபிக்கட்டும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூன் 19, வியாழனன்று #CorpusChristi என்ற ஹாஸ் டாக்குடன் வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இயேசுவினுடைய திருவுளத்தை எப்போதும் நிறைவேற்றும்படி, ஒவ்வொரு சோர்வையும் சமாளிக்க அவர் நமக்கு வலிமையையும் ஆற்றலையும் தருவாராக என்றும் தனது குறுஞ்செய்தியில் உரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்