திருஅவையை அன்புகூருங்கள், திருஅவையாகத் திகழுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"திருஅவையை அன்புகூருங்கள், அதில் நிலைத்திருங்கள், திருஅவையாகத் திகழுங்கள். அதன் நல்மேய்ப்பனும், அழகான மணமகனுமாகிய இயேசுவை அன்புகூருங்கள், அவர் யாரையும் ஏமாற்றமாட்டார், யாரும் தொலைந்து போகக்கூடாது என்று அவர் விரும்புகிறார்” என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூன் 12, வெள்ளிக்கிழமை, உரோமை உயர்மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்கள் மற்றும் திருத்தொண்டர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது அவர்களிடம் இவ்வாறு வலியுறுத்திய திருத்தந்தை, “வழிதவறிச் செல்லும் ஆடுகளுக்காகவும் இறைவேண்டல் செய்யுங்கள், அவைகளும் வரட்டும், அடையாளம் காணட்டும், அன்புகூரட்டும், இதனால் 'ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்'” என்றும் எடுத்துக்காட்டினார்.
நன்றியுணர்வு மற்றும் ஒப்புகை
உரோமையிலுள்ள அருள்பணியாளர்கள் மற்றும் திருத்தொண்டர்களின் அன்றாடப் பணிகள், தாராள மனப்பான்மை மற்றும் அமைதியான தியாகங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட திருத்தந்தை, அவர்களில் பலர் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ளதைச் சுட்டிக்காட்டி அவர்களின் தனித்துவமான உலகலாவியத் தன்மையை எடுத்துக்காட்டினார்.
ஒன்றிப்பு மற்றும் குழும வாழ்வு
"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!" (யோவான் 17:21) என்ற கிறிஸ்துவின் இறைவேண்டலில் வேரூன்றிய அருள்பணியாளர்களின் ஒன்றிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருத்தந்தை, தனிமை மற்றும் சுயநலத்தின் கலாச்சாரப் போக்குகளுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்தார்.
வலுவான ஆன்மிக வாழ்க்கை, ஒருவருக்கொருவர் ஆதரவு மற்றும் மறைமாவட்டப் பணிக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சகோதரத்துவத்தையும் தனது உரையில் ஊக்குவித்தார் திருத்தந்தை.
முன்மாதிரியான வாழ்க்கை மற்றும் வெளிப்படைத்தன்மை
நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை கொண்ட வாழ்க்கையை வாழ அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மனித பலவீனத்தை ஒப்புக்கொண்ட அதேவேளை, அருள்பணித்துவத்தின் "முதல் மணிநேரத்தின்" ஆர்வம் மற்றும் அன்புக்குத் திரும்ப வேண்டும் எனவும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் உலகச் சோதனைகளை எதிர்த்துப் போராடவும், குறிப்பாக, உரோமை போன்ற பெருநகரத்தில், தூய்மையான வாழ்வைத் தொடர்ந்து பேணவும் அவர்களுக்கு நினைவூட்டினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
சவாலான உலகில் இறைவாக்குப் பணி
நற்செய்திக்குச் சான்று பகரும் வாய்ப்புகளாக வன்முறை, சமத்துவமின்மை, வறுமை போன்ற நவீன சவால்களைப் பார்க்க அவர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, உரோமை வீட்டுவசதி நெருக்கடி போன்ற உள்ளூர் பிரச்சனைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு வலியுறுத்தியுடன், மிகவும் நீதியான மற்றும் மனிதாபிமான நகரத்தை உருவாக்குவதில் ஈடுபடவும் அவர்களிடம் விண்ணப்பித்தார்.
எதிர்காலத்தை ஆய்ந்துணரும் அருள்பணியாளர்களிடமிருந்து உத்வேகம்
Don Primo Mazzolari, Don Lorenzo Milani, Don Luigi Di Liegro ஆகியோரிடமிருந்து எதிர்காலத்தை ஆய்ந்துணர்ந்து இறைவாக்குப் பணியாற்றும் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் அவர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இறுதியாக, ஒன்றிப்பு, முன்மாதிரி, மற்றும் இறைவாக்குப் பணிக்கான அர்ப்பணிப்பில் தொடர்ந்து வளருமாறு அவர்களிடம் மொழிந்த திருத்தந்தை, அவர்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் உடனிருப்பையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்