இயேசுவை உங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டிருங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“தனிவரங்கள் கிறிஸ்துவைச் சந்திக்க வழிவகுக்கின்றன; அவை மனித மற்றும் ஆன்மிக வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் வளர்க்கின்றன, மேலும் அவை திருஅவையைக் கட்டியெழுப்ப உதவுகின்றன. இந்த அர்த்தத்தில், நாம் அனைவரும் கிறிஸ்துவைப் பின்பற்ற அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூன் 6, வெள்ளியன்று, பொதுநிலையினர் அமைப்புகள், திருஅவை இயக்கங்கள் மற்றும் புதிய சமூகங்களின் நெறியாளர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, அவைகள் பெற்றுள்ள தனிவரங்களையும் அருள்வரங்களையும் அவர்களுக்குத் தனது உரையில் எடுத்துக்காட்டினார்.
அமைப்புகள் மற்றும் தனிவரங்களின் கொடை
“நீங்கள் சேர்ந்த குழுக்கள் ஒன்றுக்கொன்று வகையிலும் வரலாற்றிலும் வேறுபடுகின்றன, மேலும் அவை அனைத்தும் திருஅவைக்கு மிகவும் முக்கியமானவை என்று உரைத்த திருத்தந்தை, அவற்றில் சில பொதுவான அப்போஸ்தலிக்க, தொண்டு அல்லது வழிபாட்டுத் திட்டத்தை மேற்கொள்வதற்காக அல்லது குறிப்பிட்ட சமூக அமைப்புகளில் கிறிஸ்தவ சாட்சியத்தை ஆதரிப்பதற்காக நிறுவப்பட்டன என்றும், இருப்பினும், மற்றவை அருங்கொடை சார்ந்ததொரு உத்வேகத்துடன் தோன்றின” என்றும் அவர்களுக்கு வேறுபடுத்திக்காட்டினார்.
“ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கான விருப்பம் ஒரு அத்தியாவசிய எதார்த்தத்தை பிரதிபலிக்கிறது என்றும், நாம் தனித்து வாழும் கிறிஸ்தவர்கள் அல்ல, மாறாக, நாம் மக்களின் ஒரு பகுதி, இயேசு கிறிஸ்துவால் நிறுவப்பட்ட ஒரே உடல்” என்றும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
“கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மனம் மற்றும் இதயத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு வகையான அறிவுசார் அல்லது உணர்வுப்பூர்வமான அனுபவமாக தனிமையில் வாழப்படுவதில்லை” என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, “உயிர்த்தெழுந்த கிறிஸ்து தம்முடைய நாமத்தில் சீடர்கள் எங்கெல்லாம் கூடுகிறார்களோ அங்கெல்லாம் அவர் இருக்கிறார் என்பதால், அது மற்றவர்களுடன், ஒரு குழுவாகவும், சமூகமாகவும் வாழ்கிறது” என்றும் மொழிந்தார்.
“இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தால், குறிப்பாக, பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி குறித்த அதன் ஆணையில், அவர்தம் திருத்தூதுப் பணி பெரிதும் ஊக்குவிக்கப்பட்டது” என்றும், “அப்போஸ்தலிக்க இயக்கங்கள் மிகவும் முக்கியமானவை, ஏனென்றால் திருத்தூதுப்பணியானது பெரும்பாலும் திருஅவை சமூகங்களிலோ அல்லது பல்வேறு துறைகளிலோ ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கிறது” என்று அங்கே நாம் வாசிக்கிறோம் என்பதையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
“உங்கள் இயக்கங்களையும் குழுமங்களையும் கிறிஸ்துவுக்கு மிகவும் நெருக்கமாகக் கொண்டுவர உதவிய அவற்றின் தனிவரங்களுக்காக நான் நன்றி கூறுகிறேன்” என்று கூறிய திருத்தந்தை, “அவை திருஅவையின் தாய்மையைக் கண்டறிந்துள்ளன, மேலும் விசுவாசத்திலும், சமூக வாழ்க்கையிலும், பிறரன்புப் பணிகளிலும் வளரவும், நற்செய்தி அறிவிப்பு வழியாக, அவ்வியக்கங்கள் பெற்றுக்கொண்ட கொடைகளை மற்றவர்களுக்குக் கொண்டு செல்லவும் இந்தத் தனிவரங்கள் உதவுகின்றன” என்றும் விவிரித்தார்.
ஒன்றிப்பு மற்றும் பணி
“ஒன்றிப்பு மற்றும் பணி இரண்டும் திருஅவை வாழ்வின் இரண்டு இன்றியமையாத அம்சங்களாகும்” என்றும், “இவை இரண்டும் புனித பேதுருவின் ஊழியத்தின் இரண்டு முன்னுரிமைகளாகும்” என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, “இந்தக் காரணத்திற்காக, அனைத்துத் திருஅவை அமைப்புகளும், இயக்கங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த இரண்டு துறைகளிலும் திருத்தந்தையுடன் உண்மையாகவும் தாராளமாகவும் ஒத்துழைக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் கூறினார்.
இறுதியாக, “நீங்கள் கிறிஸ்துவை உங்கள் பணியின் மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், “தன்னையே வெறுமையாக்கும் கிறிஸ்துவின் அன்பின் முன்மாதிரியைப் பின்பற்றி, திருஅவைக்குள் சந்திப்பு, வளர்ச்சி மற்றும் சேவையை வளர்க்க உங்களின் தனிவரங்களைப் பயன்படுத்த வேண்டும்” என்றும் அவர்களிடம் விண்ணப்பித்துத் தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்