இறைவேண்டல் செய்வது முக்கியத்துவம் பெறவேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"வெறுப்பிலிருந்து இதயங்களை விடுவித்த கிறிஸ்துவைப் பின்பற்றுவோம்” என்றும், “பிரிவினை மற்றும் பழிவாங்கும் மனநிலையிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை நமது எடுத்துக்காட்டான வாழ்க்கை வழியாகக் காண்பிப்போம்" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூன் 26, வியாழக்கிழமை, கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவைகளின் பணிகளுக்கு உதவும் நிறுவனங்களின் (ROACO) ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.
முன்னதாக, அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்ற திருத்தந்தை, கடுமையான சவால்களுக்கு மத்தியில் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவைகள் ஆற்றிவரும் அற்புதமான அர்ப்பணம் நிறைந்த பணிகளுக்காகத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
துன்பங்கள் மத்தியில் பணிகள்
கிறிஸ்தவக் கிழக்குப் பகுதிகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் போர்கள், வெறுப்பு மற்றும் துன்பங்களை எதிர்கொண்டு வரும் வேளையிலும், அவர்களின் பணி மகிழ்ச்சி தரும் நற்செய்தி சார்ந்த பணியாக அமைந்துள்ளது என்றும், குறிப்பாக, இச்சூழலில் இப்பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் இடம்பெற்றுவரும் மோதல்களையும், வன்முறை மற்றும் அநீதியைத் தூண்டும் அதிகார முறைகேடு, பிரச்சாரம் மற்றும் ஆயுத வர்த்தகத்தையும் தனது உரையில் கடுமையாகக் கண்டித்தார் திருத்தந்தை.
செபம், அமைதி, சாட்சிய வாழ்வு
ஏரோது மற்றும் பிலாத்துவின் வன்முறை, அதிகாரத்தால் இயக்கப்படும் எடுத்துக்காட்டுகளுடன் இதை வேறுபடுத்திக் காட்டிய திருத்தந்தை, கிறிஸ்துவின் அன்பு, மன்னிப்பு மற்றும் அமைதி பற்றிய செய்திக்கு இறைவேண்டல், அமைதி மற்றும் உண்மையுள்ள சாட்சிய வாழ்வை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
துன்பங்கள் மத்தியிலும் உறுதியான மனம்
துன்ப துயரங்கள் மத்தியிலும் தங்கள் வாழ்விடங்களில் உறுதியான மனதுடன் வாழும் கிழக்கு கிறிஸ்தவர்களின் மீள்தன்மை மற்றும் இறை நம்பிக்கையைப் பாராட்டிய திருத்தந்தை, கடவுளுடன் ஆழமான தொடர்பை கொண்டுள்ள கீழைத் திருஅவைகளின் வளமான ஆன்மிக மரபுகள் மற்றும் வழிபாட்டு முறைகளையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்
பரந்துவிரிந்துள்ள கத்தோலிக்கத் திருஅவைக்குள், கீழைத் திருஅவைகள் பற்றிய அதிக விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்கான அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை, ஒருவருக்கொருவர் மீதான புரிதலையும் ஒன்றிப்பையும் வளர்ப்பதற்கு, கல்வி முயற்சிகள் மற்றும் நெருக்கமான மேய்ப்புப் பணி ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்