MAP

துறவற சபையினருடன் திருத்தந்தை துறவற சபையினருடன் திருத்தந்தை   (ANSA)

உங்கள் சபைக் காட்டும் தனிவரங்களைப் பின்பற்றுங்கள்!

புனித பிரான்சிஸ் மூன்றாம் துறவு சபை, ஆப்பிரிக்கா மறைபரப்பு சபை, துணையாளரின் பணியாளர்கள் சபை ஆகிய மூன்று சபையினரையும் அவர்தம் பொதுப்பேரவையை முன்னிட்டு திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், அச்சபைகளின் தனிவரங்கள் குறித்து அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“உங்களின் பணிவாழ்வு மனமாற்றத்திற்கான அர்ப்பணிப்பு, பணிக்கான ஆர்வம் மற்றும் இரக்கத்தின் அரவணைப்பு ஆகிய திருஅவையின் மூன்று ஓளிமயமான பரிமாணங்களைக் காட்டுகிறது” என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

புனித பிரான்சிஸ் மூன்றாம் துறவு சபை, ஆப்பிரிக்கா மறைபரப்பு சபை, துணையாளரின் பணியாளர்கள் சபை ஆகிய மூன்று சபையினரையும் அவர்தம் பொதுப்பேரவையை முன்னிட்டு திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, அச்சபைகளின் தனிப்பட்ட தனிவரங்களையும் அவர்களுக்கு நினைவூட்டினார்.

புனித பிரான்சிஸ் மூன்றாம் துறவு சபை

“புனித பிரான்சிஸின் பாரம்பரியத்தில் வேரூன்றிய நீங்கள், சமூக வாழ்க்கை, உருவாக்கம் (formation) மற்றும் இறையழைத்தல்களில் கவனம் செலுத்த ஊக்குவிக்கப்படுகிறீர்கள்” என்றும், “எப்போதும் உங்களின் "மனந்திரும்புதல்" மனப்பான்மை மற்றும் தொடர்ச்சியான தனிப்பட்ட மனமாற்றத்தால் வழிநடத்தப்படுகிறீர்கள்” என்றும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

ஆப்பிரிக்கா மறைபரப்பு சபை

“1856-ஆம் ஆண்டு வலுவான மறைபரப்பும் மனப்பான்மையுடன் நிறுவப்பட்ட உங்களின் சபை, சவால்களுக்கு மத்தியிலும் மறைபரப்புதலில் காட்டிய விசுவாசத்திற்காக நீங்கள் பாராட்டப்படுகிறீர்கள்” என்றும், “எளிமை, பற்றின்மை மற்றும் நற்செய்தியை அறிவிப்பதில் நீங்கள் காட்டிய அர்ப்பணிப்பு திருஅவைக்கு ஒரு முக்கிய சான்றாக அமைந்துள்ளது” என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

துணையாளரின் பணியாளர்கள் சபை

“1942-ஆம் ஆண்டு சிரமத்தில் இருக்கும் அருள்பணியாளர்களை ஆதரிப்பதற்காக நிறுவப்பட்ட உங்கள் சபையின் ஆன்மிக மற்றும் உளவியல் குணப்படுத்தும் பணி மிகவும் மதிப்புக்குரியதாக இருக்கின்றது” என்றும், “உங்களின் பணி, அருள்பணியாளர்கள் உட்பட அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் குணப்படுத்துதலும் இரக்கமும் தேவை என்பதை நினைவூட்டுகிறது” என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இறுதியாக, “உங்கள் அனைவரின் நற்பணிகள் சிறக்க தூய ஆவியார் உங்களை நிரப்பி வழிநடத்துவாராக!” என்று கூறி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் செபங்களையும் வழங்கி தனது உரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஜூன் 2025, 14:24