MAP

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களுடன் திருத்தந்தை திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களுடன் திருத்தந்தை   (ANSA)

திருப்பீடச் செயலகம் என்பது திருஅவையின் முகத்தைப் பிரதிபலிக்கிறது

திருத்தந்தையின் பணியை வழிநடத்தும் 'மனுவுருவெடுத்தல்' 'கத்தோலிக்கம்' ' ஆகிய இரண்டு முக்கிய கொள்கைகளைத் தனது உரையில் விளக்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருப்பீடச் செயலகம் என்பது திருத்தந்தையுடன் இணைந்து செயல்படும் ஒரு சிறந்த குழுமம். இதன்வழி உலகம் முழுவதும் இருக்கும் இறைமக்களின் கேள்விகள், சிரமங்கள், சவால்கள் மற்றும் நம்பிக்கைகளை நாம் ஒன்றாகப் பகிர்ந்து கொள்கிறோம் என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூன் 5, வியாழனன்று, திருப்பீடச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுவைச் சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்ற உதவுவதன் வழியாகத் திருஅவையின் வாழ்க்கைக்கு ஒரு மதிப்புமிக்க சேவையை வழங்குவதாகக் கூறி அவர்கள் அனைவரையும் மனமகிழப் பாராட்டினார்.

Praedicate Evangelium எனப்படும் ஆவணத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, திருத்தந்தையின் உலகளாவிய பணியை ஆதரிப்பதில் திருப்பீடச் செயலகத்தின் முக்கிய பங்கை வலியுறுத்திய திருத்தந்தை, திருஅவையின் பன்முகத்தன்மை மற்றும் உலகளாவியத் தன்மையைப் பிரதிபலிக்கும் சாதாரண மக்கள் மற்றும் பெண்களின் குறிப்பிடத்தக்க இருப்பைக் குறிப்பிட்டு, செயலகத்தில் வளர்ந்து வரும் நிலை குறித்தும்  அவர் ஒப்புக்கொண்டார்.

மனுவுருவெடுத்தல் மற்றும் கத்தோலிக்கம்

திருத்தந்தையின் பணியை வழிநடத்தும்  'மனுவுருவெடுத்தல்' (தபோதைய எதார்த்தங்கள் மற்றும் கலாச்சாரங்களுடன் உறுதியாக ஈடுபடுதல்), 'கத்தோலிக்கம்' (உலகளாவிய பன்முகத்தன்மைக்கான ஒன்றிப்பையும் பாராட்டையும் வளர்ப்பது) ஆகிய இரண்டு முக்கிய கொள்கைகள் குறித்து அவர்களுக்கு விளக்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்திற்குப் பிறகு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் தொடங்கப்பட்ட சீர்திருத்தங்களுடன் திருப்பீடச் செயலகத்தின் நவீன வளர்ச்சியை நினைவுகூர்ந்த திருத்தந்தை, இது திருஅவையை சமகால சவால்களுக்கு மிகவும் பதிலளிக்கக் கூடியதாகவும் உலகளாவிய விசுவாசிகளின் பிரதிநிதியாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

திருப்பீடத் துறைகள் முழுவதும் திருப்பீடச் செயலகத்தின் ஒருங்கிணைப்புப் பங்கும், நாடுகள் மற்றும் அனைத்துலக அமைப்புகளுடனான அதன் தூதரகப் பணிகளும் இன்றியமையாததாக உறுதிப்படுத்தப்பட்டன என்பதை அவர்களுக்கு விளக்கிய திருத்தந்தை, அவர்களின் பொறுப்புகளின் சிக்கலான தன்மையையும் கோரிக்கைகளையும் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புக்கொண்டு, அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் ஊக்கத்தையும் தெரிவித்தார் என்பதையும் அவர்களுக்கு நினைவுபடுத்தினார்.

ஒன்றிப்பை வளர்ப்போம்

பேராசை மற்றும் போட்டிமனப்பான்மையிலிருந்து விடுபட்டு, நம்பிக்கை, தொண்டு மற்றும் ஒன்றிப்புணர்வை வளர்க்க வேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அவர்களின் இந்த அர்ப்பணிப்பு நிறைந்த பணியை அன்னை கன்னி மரியாவிடம் ஒப்படைத்து,  அவர்களுக்குத் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி இந்த உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஜூன் 2025, 14:45