எத்தியோப்பியாவின் புதிய திருப்பீடத் தூதருக்கு வரவேற்பு!
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
2025, ஏப்ரல் 12 அன்று, மறைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் எத்தியோப்பாவின் புதிய திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்ட பேராயர் Brian Ngozi Udaigwe அவர்களை, Addis Ababa-ல் உள்ள திருப்பீடத் தூதரகத்தில் எத்தியோப்பாவின் தலத்திருஅவைத் தலைவர்கள், தூதரக உறுப்பினர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் எனப் பலரும் அன்புடன் வரவேற்றனர்.
நைஜீரியாவின் Orlu மறைமாவட்டத்தைச் சேர்ந்த பேராயர் Udaigwe அவர்கள், இதற்கு முன்னர் இலங்கையின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியதுடன், திருப்பீடத்தின் தூதரகப் பணிகளில் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராவார்.
1992-ஆம் ஆண்டு, மே 2-ஆம் தேதியன்று, அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட பேராயர் Udaigwe அவர்கள், உரோமையில் தனது மேற்கல்வியை முடித்து, 1994-ஆம் ஆண்டு, ஜூலை முதல் தேதியன்று, திருஅவையின் தூதராகப் பணிகளில் சேர்ந்தார். ஜிம்பாப்வே, ஐவரி கோஸ்ட், ஹெய்தி, தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற இடங்களில் பணியாற்றியுள்ளார்.
மேலும், பேராயர் Udaigwe அவர்கள், 2013-ஆம் ஆண்டு, பிப்ரவரி 22-ஆம் தேதியன்று, திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களால், இத்தாலியிலுள்ள சர்தினியாவின் Suelli-ன் பட்டம்சார் பேராயராகவும், திருப்பீடத் தூதராகவும் நியமிக்கப்பட்ட அதே ஆண்டு ஏப்ரல் 27 அன்று, கர்தினால் Tarcisio Bertone அவர்களால் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்பு 2020-ஆம் ஆண்டு, ஜூன் 13 முதல் எத்தியோப்பியா தூதராக நியமிக்கப்படும்வரை இலங்கையின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றினார்.
Addis Ababa-ல் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் எத்தியோப்பிய தூதரகச் செயலர் பேரருட்திரு Catterin அவர்கள் பேராயர் Udaigwe அவர்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய பேராயர் Udaigwe அவர்கள், எத்தியோப்பியாவின் வரலாறு மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தையும், பல ஆப்பிரிக்க நாடுகளின் மையமாக எத்தியோப்பியா திகழ்வதையும் எடுத்துரைத்தார்.
மேலும், எத்தியோப்பிய திருப்பீடத் தூதர் பணிக்கான இந்தச் செயல்முறை மறைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தொடங்கப்பட்டு, தற்போதைய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்று தனது பணி நியமனத்தின் தனித்துவத்தை பேராயர் Udaigwe அவர்கள் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இந்நியமனத்தின் வழியாக, திருத்தந்தையின் பிரதிநிதியாக, திருப்பீடம் மற்றும் தலத்திருஅவைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் பணியில் தன்னை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார் பேராயர் Udaigwe.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்