அன்பிற்காகத் துளைக்கப்பட்ட கிறிஸ்துவின் இதயம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அன்பிற்காக துளைக்கப்பட்ட கிறிஸ்துவின் இதயம், நம் ஒவ்வொருவரையும் வரவேற்கின்ற, உயிருள்ள மற்றும் உயிரளிக்கின்ற உடல் என்றும், இது நல்ல ஆயனாக உருமாறி அருள்பணியாளர்களது பணியின் உண்மையான அடையாளத்தைப் புரிந்து கொள்ள வைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூன் 27, வெள்ளிக்கிழமை இயேசுவின் திரு இருதயப்பெருவிழாவை முன்னிட்டு அனுப்பியுள்ள அருள்பணியாளர்களுக்கான செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இறை இரக்கத்தில் ஆர்வமுள்ளவர்களாகவும், அவரது குணமளிக்கின்ற, உடன் வருகின்ற மீட்கின்ற, அன்பின் மகிழ்வின் சாட்சிகளாகவும் நாம் இருக்கின்றோம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இயேசுவின் திருஇருதயப் பெருவிழாவானது இறைமக்களின் பணிக்கு நம்மை அர்ப்பணிப்பதற்கான முழுமையான அழைப்பினைப் புதுப்பிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செபத்துடன் ஆரம்பமாகும் நமது மறைப்பணியானது, குருத்துவ வாழ்வின் தூய அழைத்தலை ஒவ்வொரு நாளும் நம்மில் புதுப்பிக்கும் இறைவனுடனான ஒன்றிப்பில் நம்மை தொடர்ந்து நிலைபெறச்செய்கின்றது என்று தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், இந்த கடவுளின் கொடையாகிய அருளை நாம் நினைவுகூர்வது மிக முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.
நினைவுகூர்வதன் வழியாக மட்டுமே கடவுள் நமக்குக் கொடுத்ததை நாம் வாழ்ந்து புதுப்பிக்கின்றோம் என்றும், நினைவாற்றல் நமது இதயங்களைக் கிறிஸ்துவின் இதயத்தோடும் நமது வாழ்க்கையை அவரது வாழ்க்கையோடும் இணைக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இதனால் நாம் நமது வார்த்தையையும் மீட்பின் அருளடையாளங்களையும் இறைமக்களுக்காகவும், அன்பினால் இணக்கம் செய்யப்பட்ட உலகத்திற்காகவும் கொண்டு வர முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், இயேசுவின் திருஇதயத்தில் மட்டுமே நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகளாக, உடன்வாழும் சகோதர சகோதரிகளாக நமது உண்மையான மனிதகுலத்தைக் காண்கிறோம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
அருள்பணியாளர்கள் அனைவரும் ஒற்றுமை மற்றும் அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், குடும்பங்கள், திருஅவை சமூகங்கள், மற்றும் உலகில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும், ஒற்றுமையை உருவாக்கவும் அருள்பணியாளர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்றும் மொழிந்துள்ளார்.
பகுத்தறிவு திறன் கொண்ட பணியாளர்களாகவும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்டப் பணியில் திறமையானவர்களாகவும், நற்செய்தியின் ஒளியைக் கண்டறிய மக்களுக்கு உதவுபவர்களாகவும் இருக்கவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், ஒற்றுமையையும் அமைதியையும் கட்டியெழுப்புபவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்