நல்லிணக்கத்தின் விதையாக வாழ அழைக்கப்படும் அருள்பணியாளர்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அருள்பணியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்வில் திருநற்கருணைக்கு முதலிடம் கொடுத்து மறைப்பணியாற்ற வேண்டும் என்றும், இறைமக்களைக் கவனித்துக்கொள்ளவும் திருஅவையில் ஒற்றுமையை வளர்த்தெடுக்கவும் அருள்பணியாளர்கள் அழைக்கப்படுகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூன் 27, வெள்ளிக்கிழமை இயேசுவின் திருஇருதயப் பெருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் 32 பேரை குருத்துவ அருள்பொழிவு செய்து, அருள்பணியாளர்களுக்கான யூபிலி நிறைவு நாள் திருப்பலியில் மறையுரையாற்றியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
பெரிய மற்றும் பயங்கரமான மோதல்களின் காலத்தில், நம்மைத் தழுவும் கடவுளுடைய அன்பு உலகளாவியது என்பதையும், அவருடைய பார்வையில் நம்மில் எந்த வகையான பிரிவினைகளுக்கும் வெறுப்புக்கும் இடமில்லை என்பதையும் அவர் அன்பு நமக்கு நினைவூட்டுகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கடவுளின் மகிழ்ச்சியைப் பற்றியும், அவரது இதயத்தின்படி அன்பு செய்து பணியாற்றும் ஒவ்வொரு மேய்ப்பனின் மகிழ்ச்சியைப் பற்றியும் எடுத்துரைக்கும் நற்செய்தியின் நல்ல ஆயன் பகுதியானது இறைத்தந்தையைப் போல நாமும் தொண்டுப்பணியாற்றி வாழவும், அவரது விருப்பத்தை நம்மில் வளர்த்துக் கொள்ளவும் அழைப்புவிடுக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை.
சகோதர சகோதரிகளிடையே நல்லிணக்கத்தின் விதையாக, தொலைந்து போனவர்களை நம் தோள்களில் சுமந்து, தவறு செய்தவர்களுக்கு மன்னிப்பை வழங்கி, வழிதவறியவர்களை அல்லது ஒதுக்கப்பட்டவர்களைத் தேடி, உடலிலும் ஆன்மாவிலும் துன்பப்படுபவர்களைப் பராமரித்து, இயேசுவுடன் நெருக்கமாக ஒன்றிணைந்து வாழ அழைக்கப்படுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
அருள்பணித்துவ வாழ்வு என்பது கிறிஸ்துவின் உடலோடு நம்மை ஒன்றிக்கின்ற தூய்மைப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தின் பணி என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நம்மிடையே எவ்வளவு ஒற்றுமை இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக மற்றவர்களை நல்ல ஆயனை நோக்கி அழைத்துச் செல்ல முடியும், தந்தையின் ஒரே வீட்டில் சகோதர சகோதரிகளாக வாழ முடியும் என்றும் குறிப்பிட்டார்.
கிறிஸ்துவின் இருதயத்திலிருந்து ஏராளமாகப் பாயும் அன்பினால் நல்லிணக்கமாக்கப்பட்டு, ஒன்றுபட்டு, மாற்றமடையும் நாம், அவரது அடிச்சுவடுகளில் ஒன்றாக நடந்து, பணிவுடனும், நம்பிக்கையில் உறுதியுடனும், வாழ வேடும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இறைத்தந்தையால் நாம் அன்பு செய்யப்படுகின்றோம். அவராலே நாம் தேர்ந்தெடுக்கப்பட்டோம், அனுப்பப்படுகிறோம் என்பதை அறிவதன் வழியாக வரும் முழுமன சுதந்திரத்துடன், உயிர்த்தெழுந்தவரின் அமைதியை உலகிற்குக் கொண்டு வருவோம் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
கடவுளையும் உடன் சகோதர சகோதரிகளையும் அன்பு செய்யவும், அருளடையாளங்களை அன்புடன் நிறைவேற்றவும், செபத்தில், வழிபாட்டில், மற்றும் பணியில், தாராளமாகவும், ஆர்வமாகவும் இருங்கள் என்றும், மந்தையாம் மக்கள் அருகில் இருந்து நேரத்தையும் ஆற்றலையும் அனைவருக்கும் கொடுங்கள் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
ஒருவர் மற்றவரிடத்தில் வேறுபாடுகள் காட்டாமல், சிலுவையில் அறையப்பட்டவரின் துளையுண்ட உடலும், புனிதர்களின் முன்மாதிரியும் நமக்குக் கற்பிப்பது போல நாம் வாழ வேண்டும் என்றும், தொடக்க கால கிறிஸ்தவர்கள், புனிதர்கள் வாழ்க்கைக்கதையை அறிந்து கொள்வதிலும், அவர்களின் நற்பண்புகளைப் பின்பற்றவும், அவர்களின் பேரார்வத்தால் ஈர்க்கப்படவும், அவர்களின் பரிந்துரையை அடிக்கடி நாடவும், விடாமுயற்சியுடன் அவர்கள் துணையை அழைக்கவும் வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்