கடவுளை அறியாது இருப்பதே மிகக்கொடிய வறுமை - திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடவுளே நமது முதல் மற்றும் ஒரே நம்பிக்கை என்பதை அங்கீகரிப்பதன் வழியாக, நாமும் நிலையற்ற நம்பிக்கைகளிலிருந்து நீடித்த நம்பிக்கைக்கு மாறுகிறோம் என்றும், கடவுளை அறியாது இருப்பதே மிகக்கொடிய வறுமை என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
“நீரே என் நம்பிக்கை” என்ற திருப்பாடல்கள் (தி.பா:71: 5) வரிகளை தலைப்பாகக் கொண்டு ஒன்பதாவது உலக வறியோர் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை 14 -ஆம் லியோ அவர்கள், பொதுக்காலத்தின் 33-ஆம் ஞாயிறாகிய நவம்பர் 16 அன்று இந்நாள் சிறப்பிக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“ஏழைகள் அனுபவிக்கும் மிக மோசமான பாகுபாடு ஆன்மிக கவனிப்பின்மை, பெரும்பான்மையான ஏழைகள் ஒரு சிறப்பு வெளிப்படையான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்; அவர்களுக்கு கடவுள், அவருடைய நட்புறவு, ஆசீர், இறைவார்த்தை, வழிபாட்டுக் கொண்டாட்டம், வளர்ச்சியடைந்த நம்பிக்கைப் பயணம் ஆகியவற்றை வழங்க நாம் தவறக்கூடாது” என்று நற்செய்தியின் மகிழ்ச்சி (எவாஞ்சலி கௌதியம்) என்னும் திருத்தூது மடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியக் கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
உலக இன்பங்களும், பொருளாதார செழிப்பும், எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், நம் இதயங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியாது என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், செல்வம் ஏமாற்றத்தினை அளிக்கிறது, வறுமையின் துயரமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கின்றது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளுக்கான நமது தேவையை அங்கீகரிக்கத் தவறியதாலும், அவர் இல்லாமல் வாழ முயற்சிப்பதாலும் வறுமை பிறக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
வறுமையை ஏற்றுக்கொண்ட கடவுள் வறியோரின் குரல்கள், கதைகள் மற்றும் முகங்கள் வழியாக நம்மை வளப்படுத்துகின்றார் என்றும், ஒவ்வொரு வகையான வறுமையும், நற்செய்தியை, உறுதியான முறையில் அனுபவிக்கவும், நம்பிக்கையின் பயனுள்ள அறிகுறிகளை வழங்கவும் நம்மை அழைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
ஏழைகள் தங்களின் வாழ்க்கை, வார்த்தை, அறிவாற்றலால், நம்மை நற்செய்தியின் உண்மையுடன் தொடர்புபடுத்துகிறார்கள் என்றும், உலக வறியோர் நாள் கொண்டாடப்படுவது நமது மேய்ப்புப்பணியின் இதயமாக அவர்கள் இருக்கின்றார்கள் என்பதை நாம் வாழும் சமூகத்திற்கு நினைவூட்டுவதற்காக என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
கிறிஸ்தவ நம்பிக்கை என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு படியிலும் உறுதியானது என்று கடவுளின் வார்த்தை நமக்கு எடுத்துரைக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், அது நமது மனித பலத்தைச் சார்ந்தது அல்ல, மாறாக எப்போதும் உண்மையுள்ள கடவுளின் வாக்குறுதியைச் சார்ந்தது என்றும் மொழிந்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்