MAP

Sovereign Military Order of Malta அமைப்பினருடன் திருத்தந்தை Sovereign Military Order of Malta அமைப்பினருடன் திருத்தந்தை  (ANSA)

Sovereign Military Order of Malta அமைப்பினருக்கு திருத்தந்தை வாழ்த்து

இடம்பெயர்ந்து வாழும் மக்கள், புறக்கணிக்கப்பட்டோர், மற்றும் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் அனைவருக்கும் Sovereign Order of Malta எனப்படும் மால்ட்டா மருத்துவமனை கத்தோலிக்க பொதுநிலையினர் உலகளாவிய சபையின் மகத்தானச் சேவைகளுக்கு திருஅவை நன்றி.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

ஜூன் 24, இன்று புனித திருமுழுக்கு யோவானின் பெருவிழாவில், அவரை பாதுகாவலராகக் கொண்ட Sovereign Military Order of Malta    மால்ட்டா மருத்துவமனை கத்தோலிக்க பொதுநிலையினர் உலகளாவிய சபையினருக்கு திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

இடம்பெயர்ந்து வாழும் மக்கள், புறக்கணிக்கப்பட்டோர் மற்றும் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் அனைவருக்கும் அவர்கள் ஆற்றி வரும் மகத்தான சேவைகளுக்கு திருஅவை நன்றி கூறுகிறது என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

தனது பிறப்பிற்கு முன்னரே, கடவுளின் திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கிய திருமுழுக்கு யோவானை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும், தூய ஆவியானவரின் துணை கொண்டு, திருஅவை மற்றும் அவர்கள் வாழ்வில் ஆற்ற வேண்டிய பணிகளை அவர்களின் பாதுகாவலரான திருமுழுக்கு  யோவான் ஒளிரச் செய்ய வேண்டும் என்றும் உரைத்துள்ளார் திருத்தந்தை.

மேலும், மால்ட்டா மருத்துவமனை கத்தோலிக்க பொதுநிலையினர் உலகளாவிய சபையினரின் இரு முக்கிய நோக்கமான  விசுவாசத்தை பாதுகாத்தல்,  மற்றும்  ஏழைகளுக்கு பணிபுரிதல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, வார்த்தை மற்றும் வாழ்க்கைச் சான்றின் மூலம் கடவுளின் அன்பை அறிவிக்கவும் அவ்வமைப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆண்டவர் இயேசு செய்தது போல, நமது அன்பு மற்றவர்களின் நிலைக்குத் தாழ்ந்து செல்லும் அன்பாக இருக்க வேண்டும் என்றும், இவ்வாறு செய்வதன் வழியாக கடவுளின் உடனிருப்பை பிறருக்கு வழங்குவதோடு, அன்பே உருவான கடவுளின் மீதான நம்பிக்கையை மிகச் சரியாக அறிவிக்க முடியும் என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் மேற்கொள்ளப்படும் நற்செயல்களுக்காகத் தேவைப்படுகின்ற  பொருளாதார உதவிகள், இலக்கை  அடைவதற்கான கருவிகள் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், நல்ல நோக்கங்களை அடைய நல்ல வழிமுறைகளே இருக்க வேண்டும்  என்றும் அவ்வமைப்பினருக்கு தனது செய்தியில்  அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

மேலும் உள்மனமாற்றமே உண்மையான மாற்றம் என்றும், நோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு அவர்கள் ஆற்றும் சேவையே மனமாற்றத்தை ஊக்குவிக்கும் என்றும்,  இந்தக்  கருணை உணர்வே அவர்களின் பாரம்பரிய ஆன்மிகத்தை வெளிப்படுத்தும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஜூன் 2025, 15:23