பெருவில் திருத்தந்தையின் மறைப்பணியை விவரிக்கும் ஆவணப்படம்
சுஜிதா சுடர்விழி – வத்திக்கான்
2025—ஆம் ஆண்டு மே 8, சனிக்கிழமை அன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாதத்தினை நினைவுகூரும் விதமாக ஜூன் 8, ஞாயிறு வத்திக்கான் சமூக ஊடகத்தால் ஒரு காணொளியானது வெளியிடப்பட்டுள்ளது.
“León de Perú” என்று இஸ்பானிய மொழியில் பெயரிடப்பட்டுள்ள இக்காணொளியில் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், பெருவில் (Robert Francis Prevost) மறைப்பணியாளராக, பங்குப்பணியாளராக, பேராசிரியராக, உருவாக்குநராக, ஆயராக, நண்பராக பணியாற்றியதை, பெருவில் உள்ள மக்களே எடுத்துரைக்கும் கருத்துக்களாக இக்காணொளியானது உருவாக்கப்பட்டுள்ளது.
பெருவில் உள்ள Chulucanas, Trujillo, Lima, Callao, மற்றும் Chiclayo என சிறிய மற்றும் பெரிய நகரங்கள், கிராமங்கள், மாவட்டங்கள், புறநகர்ப் பகுதிகள், பள்ளிகள், துறவற சபைகள் போன்ற இடங்கங்களில் திருத்தந்தை அவர்கள் மறைப்பணியாற்றி திருப்பலி நிறைவேற்றியது, இளையோரைச் சந்தித்தது ஆகியவை குறித்த காட்சிகளை இந்த ஆவணப்படமானது உள்ளடக்கியுள்ளது.
ஆவணப்படத்தின் முன்னோட்டமான இக்காணொளியானது பல தனிப்பட்ட கதைகளை உள்ளடக்கியதாகவும், மனித வர்த்தக ஆணையம் உருவாக்குதல், கோவிட் -19 பெருந்தொற்று மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் திருத்தந்தை முன்னெடுத்த பல நற்பணிகளையும் அவருடன் சேர்ந்து பணி செய்தவர்களின் சான்றுகளை வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது.
மே8, சனிக்கிழமை அன்று 267-ஆவது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது அறிவிக்கப்பட்டவுடன் (ஹபேமுஸ் பாப்பம்) பெரு மக்கள், எவ்வாறு தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள் என்பதையும் இக்காணொளியானது சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்