MAP

திருத்தந்தை 14ஆம் லியோ திருத்தந்தை 14ஆம் லியோ   (@Vatican Media)

ஒற்றுமையை நோக்கி நம்மை வழிநடத்தும் திசைகாட்டி நிசேயா திருச்சங்கம்

நிசேயா நம்பிக்கையை ஒன்றிணைந்துக் கொண்டாடுவதன் வழியாகவும், அதை ஒன்றாக அறிவிப்பதன் வழியாகவும், நம்மிடையே முழுமையான ஒற்றுமையை மீட்டெடுப்பதை நோக்கி நாம் முன்னேறுவோம் - திருத்தந்தை 14-ஆம் லியோ.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நிசேயா திருச்சங்கம் என்பது கடந்த கால நிகழ்வு மட்டுமல்ல, அனைத்து கிறிஸ்தவர்களின் காணக்கூடிய முழுமையான ஒற்றுமையை நோக்கி நம்மை தொடர்ந்து வழிநடத்த வேண்டிய ஒரு திசைகாட்டி என்றும், கத்தோலிக்கர்களும் ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவையினரும் ஒன்றிணைந்து மேற்கொண்ட பொதுவான பயணத்திற்கான முதல் அடித்தளமாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஜூன் 7, சனிக்கிழமை “நிசேயா திருச்சங்கம் மற்றும் மூன்றாம் மிலேனியத் திருஅவை – கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் ஒற்றுமையை நோக்கி” என்ற தலைப்பில் புனித தாமஸ் அக்குயினாஸ் திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கலந்தாய்வரங்கத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் ஏறக்குறைய 230 பேரை திருப்பீடத்தில் சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.     

கலந்தாய்வரங்கத்தின் மூன்று கருப்பொருள்களான நிசேயா திருச்சங்க நம்பிக்கை, ஒருங்கிணைந்த பயணம், உயிர்ப்பு நாளைத் தெரிவுசெய்தல் போன்றவை குறித்தக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நிசேயா திருச்சங்க நம்பிக்கை

நிசேயா திருச்சங்கம் வலியுறுத்தும் “தமத்திரித்துவக் கடவுளையும், உண்மையான மனிதனாகவும், கடவுளாகவும் இருக்கும் கிறிஸ்து இயேசுவையும், அந்த இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கிடைக்கும் மீட்பையும் நாம் நம்புகின்றோம், திருஅவை, திருமுழுக்கு, உயிர்ப்பு நிலைவாழ்வை நம்புகின்றோம் என்று உறுதியுடன் எடுத்துரைப்பவகளாக இருப்போம் என்று கூறினார் திருத்தந்தை.

இத்தகைய பொதுவான அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைவதன் வழியாக, நம்மை இன்னும் பிரிக்கும் புள்ளிகளை வேறு வெளிச்சத்தில் காண முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இறையியல் உரையாடல் மற்றும் கடவுளின் உதவியுடன், நம்மை ஒன்றிணைக்கும் மறைபொருள் பற்றிய சிறந்த புரிதலைப் பெறுவோம் என்றும் கூறினார்.

நிசேயா நம்பிக்கையை ஒன்றிணைந்துக் கொண்டாடுவதன் வழியாகவும், அதை ஒன்றாக அறிவிப்பதன் வழியாகவும், நம்மிடையே முழுமையான ஒற்றுமையை மீட்டெடுப்பதை நோக்கி நாம் முன்னேறுவோம் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

கூட்டொருங்கியக்கப் பயணம்

ஒருங்கிணைந்தப் பயணத்திற்கான சினோடல் பாதையை நிசேயா திருச்சங்கம் திறந்து வைத்தது என்று தெரிவித்த திருத்தந்தை அவர்கள், அண்மையில் வத்திக்கானில் நடைபெற்ற சினோடல் குறித்த ஆயர் கூட்டத்தில் பங்கேற்ற, கிழக்கு மற்றும் மேற்கத்திய திருஅவைகள் மற்றும் திருஅவைச் சமூகங்களைச் சேர்ந்த சகோதரத்துவ பிரதிநிதிகளின் பங்களிப்பானது, சினோடல் தன்மை மற்றும் நடைமுறையைப் பற்றிய அதிக பிரதிபலிப்புக்கு ஒரு மதிப்புமிக்க தூண்டுதலாக அமைந்தது என்றும் எடுத்துரைத்தார்.

உயிர்ப்புப் பெருவிழா

இந்த ஆண்டில், அனைத்து கிறிஸ்தவர்களும் ஒரே நாளில் உயிர்ப்புப்பெருவிழாவைக் கொண்டாடியுள்ள நிலையில், கிறிஸ்தவர்கள் விரும்பும் ஒற்றுமையானது நமது சொந்த முயற்சிகளின் பலனாகவோ, அல்லது அது முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட மாதிரியாகவோ அல்லது வரைபடத்தின் வழியாக அடையப்படக்கூடிய ஒன்றாகவோ இருக்காது என்றும், மாறாக ஒற்றுமை என்பது "கிறிஸ்துவின் விருப்பப்படியும், அவர் விரும்பும் வழிமுறைகளாலும்", தூய ஆவியின் செயல்பாட்டால் பெறப்படும் ஒரு பரிசாக இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஜூன் 2025, 13:39