MAP

திருத்தந்தை 14-ஆம் லியோ. திருத்தந்தை 14-ஆம் லியோ.  (@Vatican Media)

அரசியல் என்பது மிக உயர்ந்த தொண்டுப்பணிகளின் வடிவம்

மனித குடும்பத்தின் நன்மைக்கான கடவுளின் நிலையான அக்கறையின் உறுதியான அடையாளம் மற்றும் சான்றாக அரசியல் வாழ்க்கைத் திகழவேண்டும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அரசியல் என்பது மிக உயர்ந்த தொண்டுப்பணிகளின் வடிவம் என்று சரியாக வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், அரசியல் வாழ்க்கை சமூகத்திற்கும் பொது நன்மைக்கும் செய்யும் பணியை நாம் கருத்தில் கொண்டால், அது உண்மையிலேயே கிறிஸ்தவ அன்பின் செயலாகக் காணப்படலாம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஜூன் 21, சனிக்கிழமை வத்திக்கானில் நிர்வாகத்தினருக்கான யூபிலியை முன்னிட்டு ஏறக்குறைய 600 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், பொது நலனில் அக்கறை, சமய சுதந்திரம் மற்றும் பல்சமய உரையாடல், மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் ஆகியவை குறித்தக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

நமது மனித குடும்பத்தின் நன்மைக்கான கடவுளின் நிலையான அக்கறையின் உறுதியான அடையாளம் மற்றும் சான்றாக அரசியல் வாழ்க்கை திகழவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், ஏறக்குறைய 68 நாடுகளிலிருந்து வந்திருந்த நாட்டின் அரசுப்பிரதிநிதிகள் அனைவரையும் வாழ்த்தினார்.

பொது நலனில் அக்கறை   

உலகின் சிலரின் கைகளில் குவிந்துள்ள மகத்தான செல்வத்திற்கும் உலகின் ஏழைகளுக்கும் இடையிலான ஏற்றுக்கொள்ள முடியாத ஏற்றத்தாழ்வு தொடர்ச்சியான அநீதியின் சூழ்நிலைகளை உருவாக்குகிறது என்றும், இது உடனடியாக வன்முறைக்கும்,  போரின் துயரத்திற்கும் வழிவகுக்கின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நாட்டின் வளங்களை சமமாக பகிர்ந்தளிப்பதை ஊக்குவிப்பதன் வழியாக, நல்ல அரசியலானது, உள்நாட்டிலும் பன்னாட்டு அளவிலும் நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கு ஒரு பயனுள்ள பணியை வழங்க முடியும் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

சமய சுதந்திரம் மற்றும் பல்சமய உரையாடல்

கடவுள் மீதான நம்பிக்கை, அதிலிருந்து பெறப்படும் நேர்மறையான மதிப்புகளுடன், தனிநபர் மற்றும் சமூக வாழ்க்கையின் நன்மை மற்றும் உண்மையின் மகத்தான ஆதாரமாக பல்சமய உரையாடல் திகழ்கின்றது என்றும், குறுகிய பார்வை மற்றும் அழிவுகரமான சுய-அன்பிலிருந்து, ஒரு சுதந்திரமான மற்றும் தாராளமான அன்பிற்கு மாற வேண்டியதன் அவசியத்தைப் பற்றி புனித அகுஸ்தினார் எடுத்துரைத்தார் என்றும் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

உண்மையான சமய சுதந்திரம் இருப்பதற்கான நிலைமைகளை ஊக்குவிப்பதன் வழியாகவும், வெவ்வேறு மத சமூகங்களுக்கு இடையே ஒரு மரியாதைக்குரிய மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பு உருவாகக்கூடும் என்று நம்புவதன் வழியாகவும் நாம் நிறைய சாதிக்க முடியும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம்

டிசம்பர் 10, 1948 அன்று ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் மனிதகுலத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்றும், மனிதனை, மீற முடியாத ஒருமைப்பாட்டில், உண்மைக்கான தேடலின் அடித்தளத்தில் வைப்பதற்கும், மனித மாண்பை மீட்டெடுப்பதற்கும் பெரிதும் பங்களிக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை.

செயற்கை நுண்ணறிவின் வடிவத்தில் சவால்கள், சமூகத்திற்கு பெரிதும் உதவும் ஒரு வளர்ச்சியாகும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அதன் வேலைவாய்ப்பு மனிதனின் அடையாளம் மற்றும் மாண்பையும் அவரது அடிப்படை சுதந்திரங்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை எனில் அது சமூகத்திற்கான சிறந்த வளர்ச்சி என்றும் கூறினார்.

மனிதர்களின் நன்மைக்காக ஒரு கருவியாக செயல்படும், செயற்கை நுண்ணறிவை புதிய சூழ்நிலைகளின் பின்னணியில், ஆரோக்கியமான, நியாயமான மற்றும் நல்ல வாழ்க்கை முறைகளை, குறிப்பாக இளைய தலைமுறையினரின் நன்மைக்காக, முன்னிறுத்துவதற்கு மிகுந்த கவனமும் தொலைநோக்கும் தேவை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜூன் 2025, 12:11