ஏழைகளில் கிறிஸ்துவின் முகத்தைக் காணவேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
மேய்ப்புப்பணியில் ஏற்படும் இடர்ப்பாடுகள், எடுக்கும் முயற்சிகளில் கிடைக்கும் மகிழ்ச்சி, இறைமக்களுடனான நெருக்கம் போன்றவற்றினால் நற்செய்தியின் உயிருள்ள அடையாளமாக மடகஸ்கார் ஆயர்கள் திகழ்கின்றார்கள் என்றும், தொலைதூர நாட்டில் கடவுளின் நற்செய்தியைக் கொண்டு வருவதற்காக ஏராளமான துயரங்களை அனுபவித்த மறைசாட்சியாளர்களையும் புனிதர்களையும் கொண்ட நாடு மடகஸ்கார் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஜூன் 16, திங்கள்கிழமை திருப்பீடத்தில் மடகஸ்கார் ஆயர்கள் ஏறக்குறைய 27 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், மடகஸ்காரின் முதல் மறைசாட்சியாளரான Henri de Solages, Jacques Berthieu, ஆகியோரின் வாழ்வு பற்றியும் நினைவுகூர்ந்தார்.
ஏழைகள் நற்செய்தியின் மையமாக இருக்கின்றார்கள், நற்செய்தி அறிவிப்பை பெற்றுக்கொள்ளும் முதன்மையானவர்களாக இருக்கின்றார்கள் என்றும், அத்தகைய ஏழைகளிடமிருந்து நமது பார்வையை விலக்கிவிட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஏழைகளில் கிறிஸ்துவின் முகத்தைக் காணவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், மேய்ப்புப்பணியானது எப்பொழுதும் நம்மில் எளியவர்கள் மற்றும் சிறியவர்களான ஏழைகளுக்கான அக்கறையில் உயிர்ப்பிக்கப்படட்டும் என்றும், இந்த யூபிலி ஆண்டில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும், கிறிஸ்து வழங்கிய நம்பிக்கையின் புதிய எல்லைகளை ஒளிரச் செய்ய உதவட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்துவது போல, நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், பலமும் பலவீனமும் கொண்டு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இயற்கை என்னும் பெரிய தனித்தீவின் அழகைப் பாதுகாக்கவும் வலியுறுத்தினார்
பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுக்காப்பது என்பது இறைவாக்குப் பணியின் ஒருங்கிணைந்த பகுதி என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயற்கையின் அழுகுரலுக்கு செவிசாய்த்து அதனைப் பராமரித்துக்கொள்ளுங்கள் என்றும், நம்பிக்கைக் கொண்ட இறைமக்களுக்கு நீதி மற்றும் அமைதியுடன் அதைப் பாதுகாக்கும் கலையைக் கற்றுக் கொடுங்கள் என்றும் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்