MAP

வத்திக்கான் கோடைகாலப் பள்ளியின் பங்கேற்பாளர்கள் உடன் திருத்தந்தை 14-ஆம் லியோ. வத்திக்கான் கோடைகாலப் பள்ளியின் பங்கேற்பாளர்கள் உடன் திருத்தந்தை 14-ஆம் லியோ.   (ANSA)

அறிவியல் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் கோடைகாலப் பள்ளி

எவ்வளவு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறீர்களோ, அவ்வளவு மகிழ்ச்சியை நீங்கள் உருவாக்குகிறீர்கள் – திருத்தந்தை 14-ஆம் லியோ.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒன்றாக வாழ்ந்து, படிக்கும் அனுபவமானது கல்வி ரீதியிலும், தனிப்பட்ட முறையிலும் நம்மை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒரே மனித குடும்பத்தின் பணியில் அறிவியலின் முன்னேற்றத்திற்கு மட்டுமே பங்களிக்கக்கூடிய நட்புறவுகளையும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வடிவங்களையும் வளர்க்க உதவுகின்றது என்று கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஜூன் 16, திங்கள்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் வத்திக்கான் ஆய்வகக் கோடைகாலப் பள்ளியின் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 30 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

எவ்வளவு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறீர்களோ, அவ்வளவு மகிழ்ச்சியை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்றும், மகிழ்ச்சியின் வழியில் அறிவைப் பின்தொடர்வதன் வழியாக, ஒவ்வொருவரும் மிகவும் அமைதியான மற்றும் நீதியான உலகத்தை உருவாக்குவதற்கு பங்களிக்க முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.

பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவை விரிவுபடுத்துவதற்காக தொலைநோக்கிக் கருவியைப் பயன்படுத்த உதவும் அறிவும் பயிற்சியும் கோடைக்காலப் பள்ளியில் வழங்கப்படுகின்றது என்றும், இப்பிரபஞ்சத்தில் ஒரு சிறிய அர்த்தமுள்ள பகுதியாக இருக்கும் நாம், இப்பிரபஞ்சம் பற்றிய அறிவு கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

“ஜேம்ஸின் விண்வெளி தொலைநோக்கி வழியாக பிரபஞ்சத்தை ஆராய்தல்” என்ற கருப்பொருளில் இவ்வாண்டு கோடைகாலப் பள்ளியானது செயல்பட இருக்கின்றது என்று

எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உயிர்கள் உருவாகக்கூடிய வெளிப்புறக் கோள்களின் வளிமண்டலத்தை ஆழமாகப் பார்க்கவும், கிரக அமைப்புகள் உருவாகும் நெபுலாக்களைப் படிக்க உதவும் தொலைநோக்கிக் கருவிகளுக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றும் கூறினார்.

இறுதியாகக் கூடியிருந்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், ஞானம், புரிதல், மகிழ்ச்சி, அமைதி ஆகிய கடவுளின் ஆசீரை அவர்களுக்காக வேண்டி செபிப்பதாகவும் எடுத்துரைத்து தனது உரையினை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஜூன் 2025, 14:45