இஸ்ரயேல் மக்களின் பயணத்தை அடையாளப்படுத்திய செபமாலை பவனி
மெரினா ராஜ் - வத்திக்கான்
அருள் நிறைந்த மரியே வாழ்க, ஆண்டவர் உம்முடனே என்ற வானதூதரின் வாழ்த்தும், பெண்களுக்குள் ஆசீர்பெற்றவர் நீரே என்ற எலிசபெத்தின் வாழ்த்தும் நமது செபமாலை பயணத்தில் கடவுளின் வார்த்தையாக நம்முடன் பயணித்து, வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி பயணித்த இஸ்ரயேல் மக்களை அடையாளப்படுத்தியது என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 31, சனிக்கிழமை அன்னை மரியின் வணக்க மாத நிறைவை முன்னிட்டு வத்திக்கான் தோட்டத்தில், வத்திக்கானில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் பங்கேற்ற செபமாலை வழிபாட்டின் இறுதியில் வழங்கிய உரையின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே மாதத்தின் இறுதியில் நாம் சிறப்பிக்கும் இந்த அன்னை மரியாவிற்கான செபவழிபாடானது நம்பிக்கையின் அடையாளமாக இருக்கின்றது என்றும், இறைபுகழ்ச்சி, வாழ்க்கைப்பாதை, எதிர்நோக்கு, எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்றிணைந்து தியானித்து வெளிப்படுத்தப்பட்ட நம்பிக்கை ஆகியவற்றை இந்த யூபிலி ஆண்டில் நமக்கு வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் வலியுறுத்துவது போல, மரியன்னை செபமானது மரியியல் அளவமைப்பையும், கிறிஸ்தியல் இதயத்தையும் கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், முழு நற்செய்தியின் கருத்தாழத்தைத் தன்னுள் கொண்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார்.
கபிரியேல் வானதூதர் அன்னை மரியாவிற்கு மங்கள வார்த்தை கூறியது, எலிசபெத்தை சந்தித்தது கிறிஸ்துவின் பிறப்பு, இயேசு கோவிலில் அர்ப்பணிக்கப்படுதல், காணாமல் போன இயேசுவை எருசலேம் ஆலயத்தில் கண்டடைதல் என்னும் மகிழ்ச்சியின் மறைபொருளை தியானித்து செபமாலை செபிக்கும்போது எருசலேம் நோக்கிய திருயாத்திரையில் இருக்கும் உணர்வைப் பெறுகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
அன்னை மரியாவுடன் இணைந்து, அவர் செய்தது போல், இயேசுவைப் பின்பற்றுவதில் ஒரு பயணமாக, பயணிக்க வேண்டிய ஒரு தொடர் பயணமாக நமது இருப்பை உணர்வோம் என்றும், நமது வாழ்க்கை, நாவு, இதயம், உதடு, குரல், செயல்பாடு என எல்லாவற்றாலும் ஒவ்வொரு நாளும் அவரை எவ்வாறு புகழ்வது என்பதை அறிய இறைவனிடம் கேட்போம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
முரண்பாடுகளைத் தவிர்த்து வாழ, நமது நாவு வாழ்க்கையுடனும், உதடுகள் மனசாட்சியுடனும் இணைந்து செயல்பட வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், செபமாலை செபிக்கக் கூடியிருந்த கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் துறவியர்கள், பொதுநிலையினர்கள் என அனைவரையும் வாழ்த்தினார்.
இறுதியாகக் கூடியிருந்த மக்களுக்கு தனது ஆசீரை வழங்கி செபமாலை வழிபாட்டை நிறைவுசெய்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்