படைப்பாளராம் இறைவன் படைப்பை அரவணைக்கும் இடம் குடும்பம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
குடும்பம் என்பது உலகைப் படைத்த இறைவன் தனது முழுமையான அன்பினால் படைப்பை அரவணைக்கும் இடமாக உள்ளது என்றும், நம்பிக்கை, எதிர்நோக்கு, பிறரன்புச் செயல்கள் குடும்பத்தில் எப்போதும் வளர்கின்றன என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஜூன் 1, ஞாயிற்றுக்கிழமை குடும்பங்கள், குழந்தைகள், தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோருக்கான யூபிலி திருப்பலியை முன்னிட்டு ஏறக்குறைய 131 நாடுகளிலிருந்து வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த 70 ஆயிரம் திருப்பயணிகளுக்கு வழங்கிய பாஸ்கா கால மூவேளை செப உரையின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
முதியவர்கள், இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை மற்றும் உத்வேகத்தின் அடையாளமாக இருப்பதற்கு நன்றி என்று தெரிவித்த திருத்தந்தை அவர்கள், தாத்தா பாட்டி மற்றும் முதியவர்களுக்கு சிறப்பான நன்றிகளையும் எடுத்துரைத்தார்.
யூபிலி திருப்பலியில் பங்கேற்பதற்காக வந்திருந்த பீட்மாண்டில் உள்ள மொந்தோவி மறைமாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து திருப்பயணிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்நாளானது நமது இவ்வுலக வாழ்வின் இலக்கை நோக்கைப் பயணிக்க அழைப்புவிடுக்கின்றது என்றும் கூறினார்.
மேலும் போலந்தின் பிரனியேவோ பகுதியில் அருளாளர்களாக உயர்த்தப்பட்ட அருள்சகோதரி கிறிஸ்தோஃபோரோ க்ளோம்ஃபாஸ் மற்றும் அவருடைய உடன்சகோதரிகள் 14 பேரும் 1945-ஆம் ஆண்டு செம்படையினரால் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கத்தோலிக்க நம்பிக்கைக்கு எதிரான வெறுப்பு மற்றும் பயங்கரவாத சூழல் இருந்த போதிலும், அவர்கள் தொடர்ந்து நோயாளிகள் மற்றும் அனாதைகளுக்குப் பணியாற்றினர் என்றும், புதிய அருளாளர்களின் பரிந்துரையில் உலகெங்கும் இறையரசுப் பணிக்காக தங்களை அர்ப்பணித்து வாழும் அனைத்து பெண் துறவறத்தாரை ஒப்படைத்து செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.
உலக சமூக தொடர்பு தினத்தை நினைவு கூரும் இந்நாளில், செய்திகளின் நெறிமுறை தரத்தை கவனித்துக்கொள்வதன் வழியாக குடும்பங்களின் கல்விப் பணியில் உதவும் ஊடகப் பணியாளர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
கன்னி மரியா குடும்பங்களை ஆசீர்வதித்து, அவர்களின் சிரமங்களில் அவர்களுக்கு ஆதரவளிப்பார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், குறிப்பாக மத்திய கிழக்கு, உக்ரைன் மற்றும் உலகின் பிற பகுதிகளில் போரினால் பாதிக்கப்படுபவர்களை நினைவுகூர்ந்து, அமைதிப் பாதையில் ஒன்றிணைந்து நடக்க கடவுளின் தாயாம் மரியா நமக்கு உதவட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்