ரிஜெய்கா பெருநகர உயர்மறைமாவட்ட நூற்றாண்டு விழா
மெரினா ராஜ் – வத்திக்கான்
குரோவேசியாவில் உள்ள ரிஜேய்கா பெருநகர உயர் மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க கர்தினால் மத்தேயு சூப்பி அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஜூன் 7, சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி ஜூன் 14, சனிக்கிழமை நூற்றாண்டு விழாக் காணும் குரோவேசியாவின் ரிஜேய்கா பெருநகர உயர்மறைமாவட்டத்தின் யூபிலி விழாவில் திருத்தந்தையின் சார்பில் பங்கேற்க போலோஞ்னா உயர்மறைமாவட்டத்தின் பேராயரும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் மத்தேயு சூப்பி அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
“நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக!” (1பேதுரு2:5) என்ற இறைவார்த்தைகளை மேற்கோள்காட்டி எழுதியுள்ள கடிதத்தில் இயேசுவின் திருப்பெயருக்குப் பணியாற்றி, விண்ணக எருசலேமில் வளர்ந்து, கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் வாயிலாக அவரது வாக்குறுதிகளை நாம் பின்பற்ற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
கடவுள் நம்மை நாளுக்கு நாள் கட்ட அனுமதிக்கின்ற காணக்கூடிய வீடாகிய ஆலயத்தில், நம்முடனான அவரது ஒற்றுமையின் மறைபொருள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு நிறைவுபடுத்தப்படுகிறது என்றும், உலகம் முழுவதும் பரவியுள்ள திருஅவையானது, அமைதியின் தரிசனத்தில் நிறைவடைய இறைவனின் உடலாக அதில் வளர்கிறது என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
கிறிஸ்து இயேசுவே மூலைக்கல்லாக, திருத்தூதர்களை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாக, நமது வாழ்வில் எதிர்நோக்கின் நங்கூரமாக திருஅவை திகழ்கின்றது என்றும், இத்தகைய திருஅவையில் ஓர் அங்கமாக ,Flumine என்று இத்தாலிய மொழியில் அழைக்கப்படும் ரிஜெய்கா பெருநகர உயர் மறைமாவட்டம் திருத்தந்தை 11-ஆம் பயஸ் அவர்களால் தொடங்கப்பட்ட ஆண்டின் நூற்றாண்டினை இவ்வாண்டு சிறப்பிக்கின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்