உலக அமைதிக்கான திருத்தந்தையின் வேண்டுகோள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஈரான் மற்றும் இஸ்ரயேலில் அண்மையில் நடக்கும் நிகழ்வுகள் அப்பகுதியில் நிலைமை மோசமாகி வருவதை எடுத்துரைப்பதாகவும், இத்தகைய மிக நுண்ணிய சூழலில் பொறுப்பு மற்றும் பகுத்தறிவிற்கான வேண்டுதலை கட்டாயம் புதுப்பிக்க விரும்புவதாகவும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஜூன் 14, சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற யூபிலி ஆண்டு சிறப்பு மறைக்கல்வி உரையின் நிறைவில் எடுத்துரைத்த உலக அமைதிக்கான செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
அணுசக்தி அச்சுறுத்தலிலிருந்து விடுபட்ட ஒரு பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை மரியாதையுள்ள சந்திப்புக்கள் மற்றும் நேர்மையான உரையாடல்கள் வழியாகத் தொடர வேண்டும் என்றும், நீதி, உடன்பிறந்த உணர்வு, பொது நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நீடித்த அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
ஒருவர் மற்றவரின் இருப்பை ஒருபோதும் அச்சுறுத்தக்கூடாது என்று தெரிவித்த திருத்தந்தை அவர்கள், அமைதிக்கான காரணத்தை ஆதரித்தல், நல்லிணக்கப் பாதைகளைத் தொடங்குதல், அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் மாண்பை உறுதி செய்யும் தீர்வுகளை ஊக்குவித்தல் போன்றவை அனைத்து நாடுகளின் கடமை என்றும் குறிப்பிட்டார்.
யூபிலி ஆண்டில் திருப்பயணிகளாக உரோம் வந்திருக்கும் மக்கள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், கிறிஸ்துவில் தங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், நற்செய்தியின் ஆற்றலின்படி வாழ்வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் யூபிலி ஆண்டு திருப்பயணம் அவர்களுக்கு உதவும் என்று நம்புவதாகவும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்