MAP

எதிர்நோக்கின் அடையாளமாகத் திகழ்ந்த ஆயர் இரேனியஸ்

இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த லியோன்ஸ் நகர ஆயர் இரேனியஸைப் போலவே, சுவர்கள் இருக்கும் இடங்களில் பாலங்களைக் கட்ட முனைவோம், உள்ளக் கதவுகளைத் திறந்து உலகுடன் நம்மை இணைப்போம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

லியோன்ஸ் நகர ஆயர் இரேனியஸ் எதிர்நோக்கின் அடையாளமாக கிழக்கு மற்றும் மேற்கை இணைத்தார், ஒன்றிப்பின் தலைவராக இருந்து,  எதிர்ப்பதற்கு அல்ல மாறாக ஒருவர் மற்றவருடன் நம்மை இணைக்க வேண்டும் என கற்பிக்கிறார் என்றும், சுவர்கள் இருக்கும் இடங்களில் பாலங்களைக் கட்ட முனைவோம், கதவுகளைத் திறந்து உலகுடன் நம்மை இணைப்போம் இதனால் நம்பிக்கை பிறக்கும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஜூன் 14, சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற சிறப்பு மறைக்கல்வி உரைக்கூட்டமானது மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த லியோன்ஸ் நகர ஆயர் இரேனியஸ் குறித்தக் கருத்துக்களைத் திருப்பயணிகளிடத்தில் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

2025 ஆம் ஆண்டு எதிர்நோக்கின் திருப்பயணிகள் யூபிலி ஆண்டை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட சிறப்பு மறைக்கல்வி உரைக்கூட்டமானது மீண்டும் ஜூன் 14 சனிக்கிழமை ஆரம்பமானது. திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமடலில் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது கருத்துக்களை இறைமக்களிடத்தில் பகிர்ந்துகொண்டார்.

1யோவான் 2: 24-25

தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்; தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால் நீங்கள் மகனுடனும் தந்தையுடனும் இணைந்திருப்பீர்கள். அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும்.

திருத்தூதர்களால் தொடக்கக் காலத்திலிருந்தே பகிரப்பட்ட எதிர்நோக்கினால் நாம் ஒன்றிணைக்கப்படுகிறோம் என்றும், இயேசுவில் விண்ணகமும் மண்ணகமும் இணைக்கப்பட்டிருப்பதை திருத்தூதர்கள் உணர்ந்து தங்களது கண்களால், காதுகளால், கரங்களால் நிலைவாழ்வு தரும் வார்த்தையை வரவேற்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

இத்தகைய மறைபொருளுக்கான  கதவுகளை யூபிலி ஆண்டானது திறக்கின்றது என்றும், விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்தில், “உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக” என்று நாம் கூறுவதுபோல கடவுளின் உலகை நமது உலகத்துடன் யூபிலி ஆண்டானது உறுதியாக இணைக்கின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

மிகப்பெரிய கிறிஸ்தவ இறையியலாளர்களில் ஒருவரான லியோந்ஸ் நகர ஆயர் இரேனியஸ் அவர்கள் எதிர்நோக்கானது எவ்வளவு அழகானது மற்றும் சரியானது என்பதை அடையாளம் காண நமக்கு உதவுகின்றார் என்றும், சிறிய ஆசியாவில் பிறந்த அவர் திருத்தூதர்களை நேரடியாக அறிந்தவர்களிடத்தில் உருவாக்கம் பெற்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.

புலம்பெயர்ந்த சமூகங்கள் அவர்களை வரவேற்கும் நாடுகளில் நம்பிக்கையை புதுப்பிக்கும் இருப்புக்களாக இருக்கின்றனர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இரேனியஸ் எதிர்நோக்கின் அடையாளமாக கிழக்கு மற்றும் மேற்கை இணைத்து மக்கள் எவ்வாறு தொடர்ந்து ஒருவரையொருவர் வளப்படுத்துகிறார்கள் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றார் என்றும் எடுத்துரைத்தார்.

துண்டு துண்டாக சிதறடிக்கப்பட்டிருந்த உலகத்தில் மோதல்களுக்கு இடம்கொடாமல் இயேசுவில் தனது கவனத்தை இன்னும் ஆழமாக கொண்டு வந்தார் என்றும், இயேசு நம்மைப் பிரிக்கும் சுவர் அல்ல, மாறாக நம்மை ஒன்றிணைக்கும் கதவு என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

ஒன்றிப்பின் தலைவரான இரேனியஸ் எதிர்ப்பதற்கு அல்ல மாறாக ஒருவர் மற்றவருடன் நம்மை இணைக்க வேண்டும் என கற்பிக்கிறார் என்றும், பிரிக்கும் இடத்தில் அல்ல மாறாக இணைக்கும் இடத்தில் அறிவாற்றல் உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.

எதிர்நோக்கின் திருப்பயணிகளாகிய நாம் அனைவரும் மக்கள் மற்றும் உயிரினங்களிடையே ஒன்றிப்பை நோக்கி நகர முடிவு செய்யும் ஒருவராக இருக்க வேண்டும் என்றும், இதனால் மற்றவர்கள் நம்மைப் பின்பற்றுவார்கள் ஆவார்கள் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த லியோன்ஸ் நகர ஆயர் இரேனியஸைப் போலவே, சுவர்கள் இருக்கும் இடங்களில் பாலங்களைக் கட்ட முனைவோம், உள்ளக் கதவுகளைத் திறந்து உலகுடன் நம்மை இணைப்போம் இதனால்  நம்பிக்கை பிறக்கும் என்று கூறி தனது கருத்துக்களை நிறைவுசெய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 ஜூன் 2025, 15:09