கிறிஸ்துவின் நறுமணத்தை உணர்பவர்களாவோம் – திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் திருவருளடையாளங்களின்போது நமது நெற்றிகளில் பூசப்பட்ட கிறிஸ்மா திருத்தைலத்தின் வழியாக நாம் கிறிஸ்துவின் நறுமணத்தை உணர்கிறோம் என்றும், இந்த இரு அருள்சாதனங்களும், கடவுளின் இறையரசில் இயேசுவின் மறுமலர்ச்சிப் பணிக்குள் நம்மை ஒன்றிணைத்துள்ளன என்றும் கூறினார்.
ஜூன் 7, சனிக்கிழமை மாலை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற பெந்தகோஸ்து பெருவிழா முன்தயாரிப்பு செப வழிபாட்டிற்குத் தலைமையேற்று, அதில் பங்கேற்ற ஏறக்குறைய 70,000 திருப்பயணிகளுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
பெந்தக்கோஸ்து நாளில், அன்னை மரியாவும், திருத்தூதர்களும் அவர்களுடன் இருந்த சீடர்களும் ஒன்றிப்பின் ஆவியால் நிரப்பப்பட்டனர், இது அவர்களின் பன்முகத்தன்மையை ஒரே கடவுளாகிய இயேசு கிறிஸ்துவில் என்றென்றும் வேரூன்றியது என்றும், பல பணிகள் அல்ல மாறாக, ஒரே பணியினை ஒன்றிணைந்து ஆற்ற உதவியது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கடவுள் நம்மை அன்பு செய்கின்றார் அவரே ஆட்சி செய்கின்றார் என்பதை இயேசுவில் நாம் காண்கின்றோம், இயேசு வழியாக நாம் கேட்கின்றோம் என்றும், பெந்தக்கோகொஸ்து நாளுக்கு முந்தைய நாளில், கடவுளின் அருகாமையில், இயேசுவின் கதைகளுடன் நம் கதைகளை இணைக்கும் அவரது ஆவியில் நாம் ஆழமாக ஈடுபட்டுள்ளோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
நாம் அன்பு செய்யும் ஒருவரின் நறுமணமானது அவரோடு நாம் கொண்டுள்ள குடும்ப அன்பினை நமக்கு எடுத்துரைப்பது போல, இன்றைய முன் தயாரிப்பு செப இரவில் நாம் ஒருவருக்கொருவர் கிறிஸ்துவின் நறுமணத்தை அடையாளம் காண்கிறோம் என்றும், இது நம்மை வியப்பிற்குட்படுத்துகின்ற மற்றும் சிந்திக்க வைக்கின்ற ஒரு மறைபொருள் என்றும் கூறினார் திருத்தந்தை.
நாம் அனைவரும் ஒரு பயணத்தில் இருக்கின்ற பயணிக்கும் மக்கள் என்ற விழிப்புணர்வு நம்மைத் தூரமாக விலக்குவதில்லை மாறாக, அனைத்து மாவையும் புளிக்க வைக்கும் புளிக்காரம் போல மனிதகுலத்தி மூழ்கடிக்கின்றது என்றும், “பூமி ஓய்வெடுக்கும், நீதி வெல்லும், ஏழைகள் மகிழ்ச்சியடைவார்கள், நாம் திருப்பயணிகளைப் போல மாறும்போது அமைதி திரும்பும்” என்பதை இறைவா உமக்கே புகழ் எடுத்துரக்கின்றது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது உலகத்தை மனிதர்கள் கைப்பற்றுவது அல்ல, மாறாக கடவுளின் அரசால் மாற்றப்பட்ட வாழ்க்கையிலிருந்து பரவும் எல்லையற்ற அருள் என்றும், நற்செய்தி அறிவிப்புப் பணி, மக்கள் வழியாகக் கடந்து செல்லும் கடவுளின் பணி என்றும் கூறினார் திருத்தந்தை.
நாம் தூய ஆவியாருக்குக் கீழ்ப்படிந்தால், மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்கள் நம்மை அச்சுறுத்துவது குறையும், நமது எதிர்காலத்தில் இருள் குறைவாக இருக்கும், தேர்ந்து தெளிதலில் இருக்கக்கூடிய கடினத்தன்மை குறையும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்