மக்களின் எதிர்காலம் குடும்பங்களால் உருவாக்கப்படுகிறது
மெரினா ராஜ் - வத்திக்கான்
தொடக்கமும் முடிவுமாக இருக்கும் இயேசுவின் வழியில் நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்தால், சமூகத்திலும் உலகிலும் அனைவருக்கும் அமைதியின் அடையாளமாக நாம் இருப்போம் என்றும், மக்களின் எதிர்காலம் குடும்பங்களால் உருவாக்கப்படுகிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஜூன் 1, ஞாயிற்றுக்கிழமை குடும்பங்கள், குழந்தைகள், தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோருக்கான யூபிலி திருப்பலியை முன்னிட்டு வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
நாம் அனைவரும் "ஒன்றாக" இருக்க வேண்டும் என்ற கிறிஸ்துவின் வார்த்தையானது விரும்பத்தக்க மிகப்பெரிய நன்மை, ஏனென்றால் இந்த உலகளாவிய ஒன்றியம் உயிரினங்களிடையே அன்பின் நிலையான ஒற்றுமையைக் கொண்டுவருகிறது என்றும், அதில் கடவுள் உயிரளிக்கும் தந்தையாக, அதைப் பெறும் மகனாக, அதைப் பகிர்ந்து கொள்ளும் தூய ஆவியாக அடையாளம் காணப்படுகிறார் என்றும் எடுத்துரைத்தார்.
கடவுள் தம்மை அன்பு செய்வது போல நம்மை அன்பு செய்கின்றார் என்பதை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார் என்றும், இறைத்தந்தை தம்முடைய ஒரே மகனை அன்பு செய்வதை விட குறைவாக அல்ல, மாறாக எல்லையற்ற வகையில் நம்மை அன்பு செய்கின்றார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நாம் விரும்புவதற்கு முன்பே வாழ்க்கையைப் பெற்றோம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறுவதுபோல, "எல்லா மனிதர்களும் கடவுளின் குழந்தைகள், ஆனால் நமது பிறப்பை நாம் தேர்வு செய்யவில்லை" என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், பிறந்த உடன் நாம் பிறரின் தேவையை நாடுபவர்களாக இருந்தோம், அவர்களன்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருந்தோம் என்றும் கூறினார்.
பிறரைச் சார்ந்து நாம் இருக்கும்போது யாரோ ஒருவர் நம்மைக் காப்பாற்றினார், பராமரித்துக் கொண்டார், நம் உடல்களையும் ஆன்மாவையும் கவனித்துக்கொண்டார் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், நாம் அனைவரும், மனிதநேயம் மற்றும் இணக்கமான கவனிப்பின் பிணைப்பு என்னும் இத்தகைய ஓர் உறவின் வழியாகவே வாழ்கிறோம் என்றும் கூறினார்.
நாம் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற இயேசுவின் விருப்பத்திற்கேற்றவாறு நாம் ஒன்றாக இருக்க அழைக்கப்படுகின்றோம் என்றும், நாம் வாழ்கின்ற பணிபுரிகின்ற, கல்வி பயில்கின்ற இடங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் நாம் ஒன்றாக இருக்க அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
தீமையை எதிர்கொண்டாலும் கூட, இயேசு நமக்காக இறைத்தந்தையிடம் தொடர்ந்து செபிக்கிறார் என்றும், செபம் நம் காயங்களில் ஒரு தைலமாக செயல்படுகிறது, அனைவருக்கும் மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் அறிவிப்பாக மாறுகிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
திருமணமான தம்பதிகளின் முன்மாதிரியான சான்றுவாழ்வை சுட்டிக்காட்டுவதன் வழியாக இன்றைய உலகம் கடவுளின் அன்பை அறிந்து வரவேற்கின்றது, அதன் ஒன்றிணைக்கும் மற்றும் சமரச சக்தியுடன் உறவுகளையும் சமூகங்களையும் சீர்குலைக்கும் ஆற்றல்களை வெல்கின்றது. இதற்கு திருமண உடன்படிக்கை தேவை என்று திருஅவை நமக்கு வலியுறுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
குடும்பத்தில், நம்பிக்கை என்பது உணவுமேஜையில் உள்ள உணவைப் போலவும், இதயத்தின் அன்பைப் போலவும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்றும், இது நம்மை அன்பு செய்கின்ற, நமது நன்மையை விரும்புகின்ற இயேசுவை எப்போதும் சந்திப்பதற்கான வாய்ப்பு பெற்ற இடமாக அமைகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்