ஒரே தந்தையின் குழந்தைகளாக வாழ உதவும் தூய ஆவியார்
மெரினா ராஜ் – வத்திக்கான்
போரினால் பிளவுபட்டு, துயரத்தால் சூழப்பட்டுள்ள இவ்வுலகிற்கு அன்பு மற்றும் அமைதியின் தூய ஆவியை நாம் வேண்டிக்கொள்வோம் என்றும், எல்லைகளைத் திறக்கவும், சுவர்களை உடைக்கவும், வெறுப்பைக் கலைக்கவும், விண்ணகத்தில் இருக்கும் ஒரே தந்தையின் குழந்தைகளாக வாழவும் நமக்கு தூய ஆவியார் உதவுவார் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஜூன் 8, ஞாயிறு பெந்தக்கோஸ்து பெருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 80,000 மக்கள் பங்கேற்ற திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
திருஅவை மற்றும் உலகைப் புதுப்பிக்கின்ற பெந்தக்கோஸ்து நாளில், தூய ஆவியாரின் வலிமையான காற்று நம் மீதும் நமக்குள்ளும் வந்து, நம் இதயங்களின் எல்லைகளைத் திறந்து, கடவுளைச் சந்திக்கும் அருளை நமக்குத் தரட்டும் என்றும், அன்பின் எல்லைகளை விரிவுபடுத்தி, அமைதி ஆட்சி செய்யும் ஓர் உலகத்தைக் கட்டியெழுப்ப நமது முயற்சிகளைத் தக்கவைக்கட்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நமக்குள் எல்லைகளைத் திறக்கும் தூய ஆவியார்
நமது வாழ்க்கையை அன்பிற்குத் திறக்கும் கொடையாக தூய ஆவியானவர் முதலில் நமக்குள் எல்லைகளைத் திறக்கிறார் என்றும், கடவுளின் இத்தகைய பிரசன்னத்தின் முன் நமது கடினமான தன்மை, மூடத்தனம், தன்னலம், நமது தடையாகிய அச்சங்கள், தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கும் சுய அன்பு ஆகியவை உருக்குகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
தன்னலத்தால் உறிஞ்சப்பட்டு, அழிந்து போகும் வாழ்க்கையின் ஆபத்தை சவால் செய்ய தூய ஆவியானவர் நமக்குள் வருகிறார் என்றும், சமூகமயமாக்கலுக்கான வாய்ப்புகள் பெருகி வரும் உலகில், அதனுடன் நாம் இணைக்கப்பட்டிருந்தாலும், அதற்கு முரண்பாடாக கூட்டத்தில் இருந்தாலும் தனிமையான பயணிகளாக, இணைப்பின் வலைகளை உருவாக்க முடியாதவர்களாக நாம் இருக்கின்றோம் என்றும், கூறினார் திருத்தந்தை.
கடவுளின் தூய ஆவியார், வாழ்க்கையைப் பார்ப்பதற்கும் வாழ்வதற்கும் ஒரு புதிய வழியைக் கண்டறிய நமக்கு உதவுகிறார் என்றும் நாம் அணியும் முகமூடிகளுக்கு அப்பால் நம்மைச் சந்திப்பதற்கு நம்மைத் திறக்கிறார் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தூய ஆவியார் கடவுளைச் சந்திக்க நம்மை வழிநடத்துகின்றார், அவருடைய மகிழ்ச்சியை அனுபவிக்க நமக்குக் கற்பிக்கிறார் என்றும் கூறினார்.
இயேசுவின் வார்த்தைகளில், அவரது அன்பில் நாம் நிலைத்திருந்தால் மட்டுமே அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பதற்கான பலத்தைப் பெறுவோம் என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், அவர் நமக்குள் எல்லைகளைத் திறக்கிறார், இதனால் நம் வாழ்க்கை வரவேற்கத்தக்க இடமாக மாறுகின்றது என்றும் கூறினார்.
நம் உறவுகளில் எல்லைகளைத் திறக்கும் தூய ஆவியார்.
தூய ஆவியார் நமது உறவுகளில் எல்லைகளைத் திறக்கின்றார் இந்தக் கொடையானது, நமக்குள் வாழும் அவருக்கும் தந்தைக்கும் இடையிலான அன்பு என இயேசு கூறுகிறார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கடவுளின் அன்பு நம்மில் இருக்கும்போது, சகோதர சகோதரிகளுக்கு நம் இதயங்களைத் திறக்கவும், நம் கடினத்தன்மையை வெல்லவும், அச்சத்தை வெல்லவும், நமக்குள் கிளறும் உணர்வுகளைப் பயிற்றுவிக்கவும் நாம் திறன் பெறுகிறோம் என்றும் மொழிந்தார்.
திருஅவையின் உறுதியான அளவுகோலான மற்றவர்களுடனான நமது உறவுகளின் எல்லைகளை விரிவுபடுத்துதல், உடன்பிறந்த உணர்வின் மகிழ்ச்சியைப் பெறுதல் ஆகியவற்றிற்காகத் தூய ஆவியானவர் நம் உள்ளங்களைத் திறக்கிறார் என்றும், எல்லைகள் அல்லது பிளவுகள் இல்லாது, திருஅவையில் ஒருவருக்கொருவர் உரையாடி வரவேற்று, நமது வேறுபாடுகளை ஒருங்கிணைத்து, ஒரே திருஅவையாக அனைவரையும் வரவேற்று விருந்தோம்பும் இடமாக மாறினால் மட்டுமே நாம் உண்மையிலேயே உயிர்த்தெழுந்தவரின் திருஅவையாகவும், பெந்தக்கோஸ்து சீடர்களாகவும் இருக்கிறோம் என்றும் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை.
மக்களிடையே எல்லைகளைத் திறக்கும் தூய ஆவியார்
பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவியாரால் நிரப்பப்பட்ட சீடர்கள் சந்திப்பின் மொழிகளை ஒருவர் மற்றவரை இணைக்கின்ற மொழிகளைப் பேசினார்கள் என்றும், பாபேல் கோபுரத்தினால் ஏற்பட்ட குழப்பமானது இறுதியாக தூய ஆவியாரால் உருவாக்கப்பட்ட நல்லிணக்கத்தால் அமைதியடைகிறது. இறை சுவாசம் நம் இதயங்களை ஒன்றிணைக்கின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
தூய ஆவியார் தடைகளை உடைத்து, அலட்சியம் மற்றும் வெறுப்பின் சுவர்களை இடித்துத் தள்ளுகிறார் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நற்செய்தியில் இயேசு எடுத்துரைப்பது போல தூய ஆவியார் "நமக்கு எல்லாவற்றையும் கற்பிக்கிறார்", "இயேசுவின் வார்த்தைகளை நமக்கு நினைவூட்டுகிறார்" (யோ:14:26) என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்