MAP

திருஅவையின் ஒன்றிப்பு, நம்பிக்கையின் உயிராற்றல் கொண்ட திருத்தூதர்கள்

சிறையில் அடைக்கப்பட்ட இரு திருத்தூதர்களும் தங்களது இரத்தத்தை சிந்தி கிறிஸ்துவிற்காகவும் நற்செய்திக்காகவும் தங்களது உயிரையேக் கையளித்தார்கள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருத்தூதர்களான தூய பேதுரு மற்றும் பவுல் இருவரின் சான்று வாழ்வானது திருஅவையின் ஒன்றிப்பு, நம்பிக்கையின் உயிராற்றல் போன்றவற்றை வலியுறுத்துகின்றது என்றும், உடன்பிறந்த உணர்வானது திருஅவை, பொதுமக்கள், அருள்பணியாளர்கள், ஆயர்கள், திருத்தந்தை அனைவருக்கு இடையிலும் தேவை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூன் 29, ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் திருத்தூதர்களான தூய பேதுரு மற்றும் பவுல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

திருத்தூதர்களான தூய பேதுரு மற்றும் பவுல் இருவரின் சான்று வாழ்வும் மறைசாட்சிய மரணமும் அவர்களை கிறிஸ்துவுடன் உறுதியாகத் தொடர்புபடுத்தியது என்றும், சிறையில் அடைக்கப்பட்ட இரு திருத்தூதர்களும் தங்களது இரத்தத்தை சிந்தி கிறிஸ்துவிற்காகவும், நற்செய்திக்காகவும் தங்களது உயிரையேக் கையளித்தார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

திருஅவையின் இருபெரும் தூண்களான திருத்தூதர்கள் புனித பேதுரு மற்றும் புனித பவுல் திருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் பெருங்கோவிலில் நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்பதற்காக ஆலயத்திற்குள் ஏறக்குறைய 5500 இறைமக்களும், வத்திக்கான் வளாகத்தில் 5000 மக்களும் கூடியிருந்தனர்.

கலிலேயாவைச் சார்ந்த எளிய மீனவரான சீமோன் பேதுரு, பரிசேயர்களைச் சார்ந்த மிகத்திறமையான, அறிவாளியான பவுல் இருவரும் எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கிறிஸ்துவைப் பின்பற்றினார்கள் என்றும், உயிர்த்த கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்படும் வரைக் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வந்த பவுல் புறஇனத்தாருக்கு நற்செய்தியை அறிவிக்கின்றார், பேதுருவோ யூதர்களுக்கு அறிவிக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இருவருக்கும் இடையே நற்செய்தியை யாருக்கு அறிவிப்பது என்பது குறித்த முரண்பாடுகள் இருந்ததாக நாம் நற்செய்தியில் அறியவருகின்றோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒன்றிப்பின் குரல்கள் மற்றும் முகங்களாக நாம் இருக்க இறைவன் அழைப்புவிடுக்கின்றார் என்பதை இவ்விரு திருத்தூதர்களின் வாழ்க்கையானது எடுத்துரைக்கின்றது என்றும், அது எவரொருவரின் சுதந்திரத்தையும் அழிக்காது என்பதை நமக்குக் கற்பிக்கிறது என்றும் கூறினார்.

வெவ்வேறு பாதைகளில் பயணித்து வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்த திருத்தூதர்கள் இருவரும் நற்செய்தியின் வெளிப்படையான தன்மையைக் கொண்டு எதிர் எதிராக இருந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், தூய ஆவியின் வாழும் ஒன்றிப்பு மற்றும் பன்முகத்தன்மையில் ஓர் பயனுள்ள இணக்கத்துடன் வாழ்ந்தவர்கள் அவர்கள் என்றும் மொழிந்தார்.    

திருத்தூதர்களான புனித பேதுரு மற்றும் பவுல் போல நாம் அனைவரும் ஒன்றிப்பின் வழியில், பன்முகத்தன்மையில் இணக்கத்துடன் வாழ அழைக்கப்படுகின்றோம் என்றும் உடன்பிறந்த உணர்வு கொண்டவர்களாக, இயேசு கிறிஸ்து நமக்கு யார்? அவர் நம் வாழ்க்கையிலும் திருஅவையின் செயல்பாட்டிலும் எந்த இடத்தைப் பிடித்துள்ளார்? என்ற கேள்விக்கு அடிக்கடி நம்மை உட்படுத்திக்கொள்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

உடன்பிறந்த உணர்வானது திருஅவை, பொதுமக்கள், அருள்பணியாளர்கள், ஆயர்கள், திருத்தந்தை அனைவருக்கு இடையிலும் தேவை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், மேய்ப்புப்பணி வாழ்க்கை, கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல், நட்புறவு, போன்றவை கொண்டு உலகுடன் உறவாட திருஅவை விரும்புகின்றது என்றும் கூறினார்.

மாற்றத்திற்கு நம் இதயங்களைத் திறந்திருக்கவும், நிகழ்வுகள், சந்திப்புகள் மற்றும் சமூகங்களின் உறுதியான சூழ்நிலைகளால் நம்மைக் கேள்விக்குள்ளாக்கவும், சகோதர சகோதரிகளால் எழுப்பப்படும் பிரச்சினைகள் மற்றும் கேள்விகளில் நற்செய்திக்கான புதிய பாதைகளைத் தேடவும், திருத்தூதர்களான பேதுருவும் பவுலும் நமக்கு வலியுறுத்துகின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை  

ஒற்றுமை மற்றும் ஒன்றிப்பின் அடையாளமாக, உயிருள்ள நம்பிக்கையுடன் கூடிய ஒரே திருஅவையாக, அனைத்து மனித சூழ்நிலைகளிலும் நற்செய்தியின் மகிழ்ச்சி மற்றும் ஆறுதலுக்கு சான்றளிக்கும் சீடர்களின் சமூகமாக மாற நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இன்றைய நாளில் பால்யம் பெறும் பேராயர்கள் ஒவ்வொருவரும் கத்தோலிக்க நம்பிக்கையின் ஒற்றுமையில் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட தலத்திருஅவைப்பணிகளை ஆற்ற வாழ்த்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஜூன் 2025, 12:54