MAP

துன்புறுவோர்களிடத்தில் வெளிப்படும் கடவுளின் அன்பான அருகிருப்பு

பசி, வறுமை மற்றும் நிழல் போன்ற துன்பங்களின் மத்தியில் கடவுள் நம்மோடு கூட இருக்கின்றார் - திருத்தந்தை 14-ஆம் லியோ.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இயேசுவின் இரக்கமானது, நம்மை மீட்க இவ்வுலகிற்கு வரும் கடவுளின் அன்பான அருகிருப்பை துன்புறுவோர்களிடத்தில் வெளிப்படுத்துகிறது என்றும், கடவுள் ஆட்சி செய்யும்போது, ​​மனிதன் எல்லா தீமைகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறான் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஜூன் 22, ஞாயிறு இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவை முன்னிட்டு உரோம் தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் மாலை 5 மணியளவில் இந்திய இலங்கை நேரம் இரவு 8.30 மணியளவில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

பாலைவனத்தில் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க கூடியிருந்த மக்களுக்கு ஏற்பட்ட பசியானது, சூரிய மறைவு போன்று உலகத்தின் மீதும் அதில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் ஏற்படும் ஓர் அடையாளம் என்றும், பசி, வறுமை மற்றும் நிழல் போன்ற துன்பங்களின் மத்தியில் கடவுள் நம்மோடு கூட இருக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.

பசியோடு இருந்த மக்கள் மீது இரக்கம் கொண்ட இயேசு தனது சீடர்களை அழைத்து அவர்களுக்கு உணவளிக்க வலியுறுத்தினார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பசி என்பது இறையரசை அறிவித்தல் மற்றும் மீட்பிற்கான சான்றுடன் தொடர்புடையதல்ல எனினும், அதற்கு மாறாக கடவுளுடனான நமது உறவின் சான்றாக இருக்கின்றது என்றும் கூறினார்.

பசியோடு இருந்த மக்களுக்கு பகிர்வின் அடையாளத்துடன் பதிலளித்த இயேசு, தனது கண்களை உயர்த்தி, செபித்து, அப்பத்தைப்பிட்டு அங்குள்ள அனைவருக்கும் உணவைக் கொடுத்தார் என்ற செயலானது தந்தையிடம் இருக்கும் நன்றியுணர்வு, மனுமகனின் செபம், தூய ஆவியுடனான சகோதரத்துவ உறவு போன்றவற்றிற்கு சான்றளிக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

பசியிலிருந்து மக்கள் கூட்டத்தைக் காப்பாற்றுவதன் வழியாக, இயேசு அனைவரையும் மரணத்திலிருந்து காப்பாற்றுவார் என்று அறிவிக்கிறார் என்றும், நற்கருணைக் கொண்டாட்டத்தில் நாம்  சிறப்பிக்கும் நம்பிக்கையின் மறைபொருள் இது என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், வாழ்வில் வறுமையின் அடையாளமாக பசி இருப்பது போல தெய்வீக மீட்பின் அடையாளமாக அப்பத்தைப் பிடும் இயேசுவின் செயல் இருக்கின்றது என்றும் கூறினார்.

மனிதனின் பசிக்குக் கடவுள் அளித்த பதில் நிலையான வாழ்வுதரும் உணவாகிய கிறிஸ்துவே என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், வாழ்விற்காக தாவரங்கள் மற்றும் விலங்குகளை உணவாக்கிக்கொள்ளும் நாம், இறந்தவற்றை சாப்பிடும்போது நாமும் ஒருநாள் இறந்துபோகின்றோம் என்பதை எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார்.

நமது தெருக்களில் பவனியாக எடுத்துச்செல்லப்படும் திரு நற்கருணையானது நம்பிக்கை கொண்டவர்களின் இதயம் மேலும் உறுதியான நம்பிக்கையைப் பெறவும், நம்பிக்கை கொள்ளாதவர்கள் தங்களது ஆன்மாவின் பசியையும் அதைத்தீர்க்கக்கூடிய உணவையும் கேட்கும்படிக்குத் தூண்டவும் வழிவகை செய்கின்றது என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.

கடவுள் நமக்குக் கொடுக்கும் உணவால் புத்துணர்ச்சி பெற்று, இயேசுவை அனைவரின் இதயங்களுக்கும் கொண்டு வருவோம், ஏனென்றால் இயேசு அனைவரையும் மீட்பின் பணியில் ஈடுபடுத்துகிறார், ஒவ்வொருவரையும் தனது விருந்தில் பங்கேற்க அழைக்கிறார். இந்த அன்பின் சாட்சிகளாக மாறும் விருந்தினர்கள் பாக்கியவான்கள் என்று கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஜூன் 2025, 18:44