MAP

மனித, கிறிஸ்தவ உருவாக்கத்திற்கான மதிப்புமிக்க வழிமுறை விளையாட்டு

தனிமையால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகம், மின்னியல் ஊடகம் அதிகரித்து வரும் சமூகம், போட்டி நிறைந்த சமூகம் ஆகியவற்றில் விளையாட்டை, மனித மற்றும் கிறிஸ்தவ உருவாக்கத்திற்கான மதிப்புமிக்க வழிமுறையாக மாற்ற முயலவேண்டும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடவுளது அழகின் பிரதிபலிப்பைக் கொண்டுள்ள ஒவ்வொரு மனிதரின் நற்செயல்களில் விளையாட்டும் உறுதியாக உள்ளது என்றும்,  தந்தை, மகன் தூய ஆவியாருக்கு இடையே ஓர் உயிருள்ள உறவாக, மனிதகுலத்திற்கும் உலகத்திற்கும் கடவுள் தன்னையேத் திறக்கிறார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை காலை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற விளையாட்டுத்துறையினருக்கான யூபிலி திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுறையாற்றியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், தூய மூவொரு கடவுளின் பெருவிழாவை நினைவுகூர்ந்து இறைஞானம் தூய தமத்திரித்துவத்தில் வெளிப்படுகின்றது அந்த ஞானம் நம்மை எப்பொழுதும் உண்மையை நோக்கி இட்டுச்செல்கின்றது என்றும் கூறினார்.

தூய மூவொரு கடவுளின் இறையியல் எதார்த்தமானது (pericoresi) நல்லிணக்க நடனமாக இறைஆற்றலாக நமது வாழ்வை உருவாக்குகின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்களுக்குத் தனது இருப்பைக் கொடுப்பதில் மகிழ்ச்சியைத் தரும் கடவுளால் நாம் படைக்கப்பட்டுள்ளதால் இத்தகைய மகிழ்ச்சியைத் தரும் விளையாட்டானது மூவொருக் கடவுளை நாம் எதிர்கொள்ள நமக்கு உதவுகின்றது என்றும் கூறினார்.

போட்டிகளின்போது விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க இத்தாலிய மொழியில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடரான «Dai!» என்பது “dare” அதாவது கொடுத்தல் என்பதை வலியுறுத்துகின்றது என்றும், உடல் செயல்திறனைக் கொடுப்பது மட்டுமல்ல, மாறாக தன்னைத் தானே கொடுத்து, "விளையாட்டை விளையாடுவது" என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

விளையாட்டை மனித மற்றும் கிறிஸ்தவ உருவாக்கத்திற்கான மதிப்புமிக்க வழிமுறையாக மாற்றும் மூன்று நிலைகள் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தனிமையால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகம், மின்னியல் ஊடகம் அதிகரித்து வரும் சமூகம், போட்டி நிறைந்த சமூகம் ஆகியவற்றில் விளையாட்டானது முக்கிய பங்கு வகிக்கின்றது என்றும் கூறினார்.

தனிமையால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகத்தில் தனித்துவமானது அதிகரித்து, ”நாம்ĝ என்பதிலிருந்து மாறி “நான்ĝ என்ற நிலைக்கு நம்மை மாற்றியுள்ளது என்றும், இச்சமூகத்தில் விளையாட்டானது இணைந்து செயல்படுதல், ஒன்றாக நடத்தல், பகிர்தல் என்ற இயேசுவின் இதயம் கொண்ட வாழ்க்கையை வாழ கற்பிக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

இதனால், மக்கள், சமூகங்கள், பள்ளிகள், பணிபுரியும் இடங்கள் மற்றும் குடும்பங்களில் நல்லிணக்கம் மற்றும் சந்திப்புக்கான ஒரு முக்கியமான கருவியாக விளையாட்டு மாறக்கூடும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

மின்னன்ணு ஊடகப் பயன்பாடு அதிகரித்து வரும் சமூகத்தில் ஊடகமானது தொலைதூரத்தில் இருக்கக்கூடிய மக்களை நமக்கு நெருக்கமாகக் கொண்டு வரும் வேளையில், நெருக்கமாக இருக்கக்கூடியவர்களை வெகுதொலைவிற்குக் கொண்டு செல்கின்றது என்றும், இச்சூழலில் விளையாட்டானது ஒன்றாக இருத்தலை வலியுறுத்தி, உடலின் உணர்வை, இடத்தை, முயற்சியை, உண்மையான நேரத்தை மதிக்கிறது என்றும் கூறினார்.

வலிமையானவர்களும் வெற்றியாளர்களும் மட்டுமே வாழத் தகுதியானவர்கள் என்று தோன்றும் போட்டி நிறைந்த சமூகத்தில், இடத்தில், விளையாட்டு தோல்வியில் இருந்து நமது பலவீனம், வரம்பு, போன்றவற்றைக் கற்றுக்கொள்ள உதவுகின்றது என்றும், விளையாட்டில் ஒருபோதும் தவறு செய்யாத, தோற்காத விளையாட்டு வீரர் என்று எவரும் இல்லை. அவர்கள் இயந்திரங்கள் அல்ல மாறாக, கீழே விழுந்தாலும், மீண்டும் எழுந்திருக்கக் கூடிய துணிவினைக் கொண்ட மனிதர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஜூன் 2025, 14:39