MAP

அன்னை மரியின் தாய்மை பாஸ்கா மறைபொருளின் பலன்

இயேசுவின் சிலுவை அடியில் இறுதி வரை நின்று புதிய திருஅவை உருவாக உதவியவர் அன்னை மரியா.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருத்தூதர் பணிகள் நூலில் நற்செய்தியாளர் லூக்கா எடுத்துரைப்பதுபோல திருத்தூதர்களுடன் மேல்அறையில் கூடியிருந்த அன்னை மரியாவின் செயல் புதிய திருஅவையை நோக்கிய அவரது தாய்மையை நமக்கு வெளிப்படுத்துகின்றது என்றும், இத்தகைய தாய்மையானது முதன்மையாக, நமக்காக இறந்து உயிர்த்த இயேசுவின் பாஸ்கா மறைபொருளின் பலனாக விளங்குகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஜூன் 9, திங்கள்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருப்பீடத்திலுள்ளோருக்கான யூபிலிக் கொண்டாட்டத் திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

தனது பணியின் காரணமாக ஒரு கனமான சிலுவையைச் சுமந்து செல்லும் ஓர் அருள்பணியாளர், ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்குச் சென்று அன்புடனும் நம்பிக்கையுடனும் தனது பணியைச் செய்ய முயற்சிப்பதன் வாயிலாக திருஅவை பலனில் பங்கேற்று பங்களிக்கிறார் என்று கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

அவ்வாறே தனது வீட்டில் ஒரு கடினமான சூழ்நிலையை அனுபவிக்கும் ஒரு குடும்பத்தின் தந்தை அல்லது தாய், கவலையை ஏற்படுத்தும் ஒரு குழந்தை, நோய்வாய்ப்பட்ட பெற்றோர்க்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர் ஒவ்வொருவரும், அன்னை மரியாவின் மற்றும் திருஅவையின் பலனில் பங்களிக்கிறார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

தனது இறுதி மூச்சின் வழியாக இவ்வுலகிற்கு இயேசு ஒப்படைத்த தூய ஆவியின் ஆற்றலானது முதல் கிறிஸ்தவர்களாகிய திருத்தூதர்கள் மேல்  பொழியப்பட்டது என்றும், இயேசுவின் துளையிடப்பட்ட இதயத்திலிருந்து வழியும் இரத்தம் மற்றும் நீருடனும், திருவருளடையாளங்களுடனும் பாய்ந்த அருளுடன் திருஅவையின் பலன் எப்போதும் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.

சிலுவை அடியில் நின்று புதிய திருஅவை உருவாக உதவியவர் அன்னை மரியா என்றும், இயேசுவின் உயிருள்ள நினைவாகவும், வேறுபாடுகளை ஒன்றிணைத்து, சீடர்களை செபத்தில் இணைத்த மரியா ஈர்க்கும் துருவமாக இருக்கிறார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஜூன் 2025, 12:47