இளைஞர்களுக்கு முன்மாதிரிகையாக இருக்கும் மிதிவண்டியாளர்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு மிதிவண்டியாளர்கள் முன்மாதிரிகையாக இருக்கின்றார்கள் என்றும், இத்தாலி மட்டுமல்லாது உலகம் முழுவதும் மிதிவண்டி நிகழ்ச்சியை விரும்புபவர்கள் இருக்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஜூன் 1, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வழியாகப் பயணித்த ஜிரோ தி இத்தாலியா நிகழ்வின் மிதிவண்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இவ்வாறு கூறிய திருத்தந்தை அவர்களுக்கு ஆசீர்அளித்து மகிழ்ந்தார்.
மிதிவண்டி ஓட்டுதல் பிற விளையாட்டுப் போட்டிகளைப்போல மிக முக்கியமானது என்றும், உடலைப் பராமரிப்பது போல ஆன்மாவையும் பராமரித்து உடல், மனம் இதயம் மற்றும் ஆன்மாவில் அக்கறை கொண்டு முழு மனிதர்களாக வாழ இறைவன் உங்களுக்கு ஆசீர் அளிப்பாராக என்றும் கூறினார் திருத்தந்தை.
Giro d’Italia என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக வத்திக்கானுக்கு வந்திருக்கும் அவர்களை வத்திக்கான் மட்டுமல்லாது, எல்லா மக்களையும் அன்பு செய்யும் கடவுளை அடையாளப்படுத்தும் முழு திருஅவையும் வரவேற்கின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், தந்தை மகன் தூய ஆவியின் ஆசீர் என்றும் உங்கள் அனைவர் மீதும் இருக்கட்டும் என்றும் எடுத்துரைத்து அவர்களுக்கு வாழ்த்துக் கூறினார்.
ஜூன் 14, 15 ஆகிய நாள்களில் வத்திக்கானில் நடைபெறவுள்ள "விளையாட்டு வீரர்களுக்கான யூபிலியின் ஒரு முன்னோட்டமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு, அக்டோபர் 28 அன்று, Athletica Vaticana-வுக்கு அனைத்துலக மிதிவண்டி அமைப்பு (UCI) உறுப்பினருக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதை முன்னிட்டு ஜிரோ தி இத்தாலியா வத்திக்கான் வழியாகச் செல்லும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்