MAP

விளையாட்டு அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான வழி

ஒரு கிறிஸ்தவராக, அநீதியை எதிர்த்து, சிறியவர்களையும் ஏழைகளையும் பாதுகாத்து, தனது 26 வயதில் கொல்லப்பட்ட அருளாளர் ஃபுளோரிபர்ட் அவர்களின் சான்றுள்ள வாழ்வானது காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் அனைத்து ஆப்ரிக்க இளைஞர்களுக்கும் துணிவையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். – திருத்தந்தை 14-ஆம் லியோ.

மெரினா ராஜ் – வத்திக்கான்

விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான பொழுதுபோக்குகளில் மனிதர்கள் தங்களது படைப்பாளரைப் போலத் திகழ்கின்றார்கள் என்றும், விளையாட்டு அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான வழி என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை தூய மூவொரு கடவுள் பெருவிழாவன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தின் முன்புறத்தில் வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

விளையாட்டு என்பது மரியாதை மற்றும் நம்பிக்கையின் பள்ளியாகவும், சந்திப்பின் கலாச்சாரம், உடன்பிறந்த உறவு போன்றவற்றை உருவாக்குகின்றது என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அனைத்து வகையான வன்முறை மற்றும் ஒடுக்குமுறையையும் எதிர்த்து, இத்தகைய விளையாட்டை உணர்வுப்பூர்வமாகப் பயிற்சி செய்ய ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.

உலக அமைதிக்கான விண்ணப்பம்

இவ்வுலகில் வாழும் பலர் ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு அமைதி மிக மிக தேவையாக உள்ளது என்றும், போர்நிறுத்தம் இருந்தபோதிலும், பொதுமக்களுக்கும், அவர்கள் வாழும் இடத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சண்டைகள் நடந்துகொண்டே இருக்கின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

அமைதியான மற்றும் நிலையான தீர்வுக்கு வழிவகுக்கும் உரையாடலை உள்ளடக்கிய அமைதியின் பாதையில் செயல்பட அனைத்து தரப்பினருக்கும் அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், ஜூன் 13 மற்றும் 14 நாள்களுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் நைஜீரியாவின் கோமாவில் யெல்வதா பகுதியில் நடைபெற்ற பயங்கரமான படுகொலையினால், ஏறக்குறைய 200 பேர் கொல்லப்பட்டதையும் நினைவுகூர்ந்த்தார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாகிய அம்மக்கள் உள்ளூர் கத்தோலிக்க மறைப்பணியாளர்களால் வழிநடத்தப்பட்டவர்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பல்வேறு வகையான வன்முறைகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியாவில் பாதுகாப்பு, நீதி மற்றும் அமைதி நிலவ வேண்டும் என்று செபிப்பதாகவும் கூறினார்.

மேலும் வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள பெனுவே மாநிலத்தின் கிராமப்புற கிறிஸ்தவ சமூகங்களுக்காக சிறப்பாக செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள்,

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறையினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூடான் மக்களையும், எல் ஃபாசர் பங்குத்தலத்தின் தந்தையாகிய அருள்பணி Luke Jumu அவர்கள் குண்டுவெடிப்பினால் இறந்ததையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காகவும் செபித்தார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் செபிப்பதை உறுதிசெய்யும் அதே வேளையில்,  போரில் ஈடுபடுவோர், போரினை நிறுத்தவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், அமைதிக்கான உரையாடலில் ஈடுபடவும் தனது வேண்டுகோளை மீண்டும் புதுப்பிப்பதாகவும் கூறிய திருத்தந்தை அவர்கள், மனிதாபிமான நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படை உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை பன்னாட்டு சமூகம் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அருளாளர் ஃபுளோரிபெர்ட்

மத்திய கிழக்கு, உக்ரைன் மற்றும் உலகம் முழுவதும் அமைதிக்காக தொடர்ந்து செபிக்க வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், புனித பவுல் பெருங்கோவிலில் ஞாயிறு மாலை காங்கோ ஜனநாயகக் குடியரசைச் சார்ந்த மறைசாட்சி ஃபுளோரிபெர்ட் ப்வானா சூய் அவர்கள், அருளாளராக உயர்த்தப்பட உள்ளதையும் எடுத்துரைத்தார்

ஒரு கிறிஸ்தவராக, அநீதியை எதிர்த்து, சிறியவர்களையும் ஏழைகளையும் பாதுகாத்த அவர், தனது 26 வயதில் கொல்லப்பட்டார் என்றும், அவரது சான்றுள்ள வாழ்வானது காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் அனைத்து ஆப்ரிக்க இளைஞர்களுக்கும் துணிவையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஜூன் 2025, 14:34

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >