அமைதிக்காக அதிகமாகக் கூக்குரல் எழுப்பும் மனிதகுலம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
முன் எப்போதையையும் விட மனிதகுலம் அதிகமாக அமைதிக்காகக் கூக்குரலிட்டு வேண்டி நிற்கின்றது என்றும், இக்கூக்குரலானது பொறுப்பையும் பகுத்தறிவையும் கோரும் ஒரு குரலாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த உலக அமைதிக்கான செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை14-ஆம் லியோ.
ஆயுதங்களின் சத்தம் மற்றும் கடுமையான வார்த்தைகளால் மோதலைத் தூண்டும் செயல் நடைபெறக்கூடாது என்றும், சரிசெய்ய முடியாத பள்ளமாக மாறுவதற்கு முன்னால் போரினால் ஏற்படும் துயரை நிறுத்த பன்னாட்டு சமூகத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் கடமை உள்ளது என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
மனித மாண்பு ஆபத்தில் இருக்கும்போது தொலைதூர மோதல்கள் என்று எதுவும் இல்லை என சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், போர் பிரச்சினைகளைத் தீர்க்காது, மாறாக, அது அவற்றைப் பெருக்கி, மக்களின் வரலாற்றில் ஆழமான காயங்களை உருவாக்குகிறது என்றும் கூறினார்.
போரினால் ஏற்படும் வலிகளை, காயங்களைக் குணமாக்க பல தலைமுறைகள் தேவைப்படும் என்றும், அன்னையர்களின் துயரம், குழந்தைகள் மீதான பயம், திருடப்பட்ட எதிர்காலம் போன்றவற்றை எந்த ஒரு போரின் வெற்றியும் ஈடுசெய்ய முடியாது என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
அரசியல் செயல்பாடுகள் ஆயுதங்களை அமைதியாக்கட்டும், நாடுகள் தங்களது எதிர்காலத்தை வன்முறை மற்றும் இரத்தச்சுவடுகள் நிறைந்த போரினால் அல்ல, மாறாக அமைதியின் செயல்களால் கண்டறியட்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நிர்வாகத்தினருக்கான யூபிலியை முன்னிட்டு வத்திக்கானிற்கு வருகை தந்திருக்கும் அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை வாழ்த்தினார்.
மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரான், இஸ்ரேல், காசா மற்றும் பாலஸ்தீனம் உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளையும் மக்களையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் போதுமான மனிதாபிமான உதவிகளின் அவசரம் மேலும் மேலும் அழுத்தமாகி வருகிறது என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்