ஒற்றுமையையும் அமைதியையும் தாங்கிச் செல்பவர்களாக இருக்க...
மெரினா ராஜ் – வத்திக்கான்
இயேசுவின் திருஉடல் திரு இரத்தப் பெருவிழாவன்று திருப்பலி பீடம் மற்றும் திருநற்கருணைப்பேழையிலிருந்து நாம் எடுத்துச் செல்லும் திருநற்கருணையானது, ஒவ்வொரு நாளும் நாம் ஒருவருக்கொருவர் ஒற்றுமையையும் அமைதியையும் தாங்குபவர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது என்று கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையின்போது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், உலகெங்கிலும் சிறப்பிக்கப்படும் இயேசு கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழா வாழ்த்துக்களை இறைமக்களுக்கு எடுத்துரைத்தார்.
பகிர்தல் மற்றும் பிறரன்புப் பணிகள் வாயிலாக நாம் ஒவ்வொருவரும் அமைதியையும் ஒற்றுமையையும் பிறருக்கு கொண்டு செல்பவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், திருநற்கருணைப்பவனியின்போது நம்மிடையே பயணிக்கும் இயேசு ஆண்டவர் நமது இல்லங்கள், குடும்பங்கள், மற்றும் முழு மனித குடும்பத்திற்கும் ஆசீர் அளிப்பார் என்று கூறினார்.
தனது வார்த்தைகளைக் கேட்கவும், குணம்பெறவும், தன்னை நோக்கி வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிக்க, தங்களிடம் உள்ள மிகக்குறைவானவற்றை பகிர்ந்தளிக்க இயேசு சீடர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார் என்றும், மீன்களையும் அப்பங்களையும் ஆசீர்வதித்து அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் அதனைப் பலுகிப்பெருக்கினார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
அங்குக் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் போதுமானதாக இருந்தது மட்டுமன்றி மீதமுள்ளவற்றைக் கூடைகளில் நிரப்பினார்கள் என்ற வரிகள் இந்த அற்புதத்திற்குப் பின்னால் ஓர் அடையாளம் இருக்கின்றது என்பதை எடுத்துரைப்பதாகக் கூறிய திருத்தந்தை அவர்கள், கடவுளின் கொடைகள் மிகச்சிறியவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்போது அவைப் பலுகிப்பெருகுகின்றன என்பதை நமக்கு நினைவூட்டுவதாகவும் கூறினார்.
நமக்கு உயிரளித்த படைப்பாளர், நம்மைக் காப்பாற்றுவதற்காக, தனது உயிரினங்களில் ஒன்றைத் தனது தாயாக இருக்கக் கேட்டுக்கொண்டார் என்றும், நம்மைப் போலவே உடையக்கூடிய, வரையறுக்கப்பட்ட, மரணத்திற்குரிய உடலைக் கொடுத்து, ஒரு குழந்தையைப் போல தன்னை அவளிடம் ஒப்படைத்தார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நாம் ஒருவருக்குக் கொடையாக, பரிசாக ஒன்றைக் கொடுக்கும்போது, அதனைப் பெறுபவர் பாராட்டுவது எவ்வளவு அழகாக இருக்கின்றது என்று விளக்கமளித்த திருத்தந்தை அவர்கள், எளிமையாக இருந்தாலும் அக்கொடையானது நம்மை கடவுளுடன் ஒன்றிணைக்கின்றது என்றும் கூறினார்.
திருப்பலி பீடத்தில் நாம் காணிக்கையாக வைக்கும் அப்பம் இரசம் போன்றவற்றுடன் நமது வாழ்வையும் கடவுள் காணிக்கையாக ஏற்கின்றார் என்றும், நம்மைப் புனிதப்படுத்தி ஆசீர்வதித்து, கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் அவற்றை மாற்றுகின்றார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நாம் காணிக்கையாக அளிப்பவற்றை மனமுவந்து ஏற்பதன் வழியாக நம்முடன் ஒன்றிக்கும் இயேசு அந்த அன்பின் பரிசை நாம் மற்றவர்களுடன் பகிர்வதன் வழியாக அவருடன் மேலும் ஒன்றிக்க நம்மை வலியுறுத்துகின்றார் என்றும், கோதுமை மணிகள் இணைந்து அப்பம் உருவாவது போல, அன்பின் இணக்கத்தில் கிறிஸ்துவின் உடல் உருவாகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்