அமைதியின் மனிதர் அருளாளர் Floribert Bwana Chui
மெரினா ராஜ் – வத்திக்கான்
Floribert Bwana Chui ஓர் அமைதியின் மனிதர், கீவு போன்ற துன்பமான பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர் என்றும், ஏழைகளுக்குப் பணியாற்றுதல், நட்புறவு சந்திப்பு போன்றவற்றைக் கடைபிடித்து அமைதிக்கான தனது போரினை மென்மையுடன் நடத்தினார் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஜூன் 16, திங்கள்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் காங்கோ ஜனநாயகக் குடியரசைச் சார்ந்த Floribert Bwana Chui அவர்களின் அருளாளர் பட்ட நிகழ்விற்காக உரோமிற்கு வருகை தந்திருந்த திருப்பயணிகள் ஏறக்குறைய 200 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
"சமூகம் எல்லா மக்களையும் ஒரே மேசைக்குக் கொண்டுவருகிறது" என்று அடிக்கடி வலியுறுத்தும் அருளாளர் அவர்கள், தீமைக்கு அடிபணியாத இளைஞனாக, நற்செய்தியின் வார்த்தைகளாலும், கடவுளுடனான நெருக்கத்தாலும் வளர்க்கப்பட்ட ஒரு கனவைக் கண்டார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கைவிடப்பட்டதாகவும் நம்பிக்கையற்றதாகவும் உணர்ந்த இளைஞர்கள் மத்தியில் அருளாளர் ஃபுளோரிபர்ட், “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்” (யோவான் 14:18) என்ற இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்தார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்திய அருளாளர் அவர்கள், "போரற்ற, வெறுப்புக்கள் அழிக்கப்பட்ட, வன்முறையற்ற ஒரு புதிய உலகத்தைக் கடவுள் நமக்காக உருவாக்குகின்றார்” என்றும், “அவ்வுலகத்தில் குழந்தைகள் அமைதியில் வளர்வார்கள் இத்தகைய கனவினை வாழ்வதற்காக நாம் வாழ்வோம்” என்றும் கூறினார் திருத்தந்தை.
இளைஞர்களை அதிகமாகக் கொண்ட ஆப்ரிக்கக் கண்டத்தின் மறைசாட்சியாளரான அருளாளர் ஃபுளோரிபெர்ட் அவர்கள், அமைதியின் புளிக்காரமாக இளையோர் மற்றும் பொதுநிலையினர் மத்தியில் ஒளி நிறைந்த சான்றாக திகழ்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.
சன் எஜியோ சமூகத்தின் ஆன்மிகத்தை வாழ்ந்தவர், செபம், அமைதி போன்றவற்றைக் கடைபிடித்தவர் என்றும், ஏழைகளுக்கு தனது வாழ்க்கையில் முன்னுரிமைக் கொடுத்தவர், சிறுகுழந்தைகளின் நலனுக்காக உழைத்தவர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்