எதிர்நோக்கின் நூலை உறுதியாகப் பற்றிப் பிடித்திருக்கும் வத்திக்கான்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தங்களது வரலாற்று வேர்களை இழக்கும் அபாயத்தில் இருக்கும் உலக நாடுகளானது தங்களது நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க, தனது குறிப்பிட்ட மற்றும் பண்டைய மரபுகளுடன் வத்திக்கான் உதவுகின்றது என்றும், எதிர்நோக்கின் நூலை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கின்றது என்றும் கூறினார் அருள்சகோதரி மரிய குளோரியா ரீவா.
ஜுன் 9, திங்கள் கிழமை திருப்பீடத்திலுள்ளோருக்கான யூபிலிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற தியானத்தில் பங்கேற்றவர்களுக்குத் தனது கருத்துக்களை எடுத்துரைத்தபோது இவ்வாறு கூறினார் திருநற்கருணை ஆராதனை சபை அருள்சகோதரி மரிய குளோரியா ரீவா.
திருப்பீடத்திலுள்ள அனைத்து துறை சார்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தாரும் பங்கேற்ற இத்தியானத்தில் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களும் பங்கேற்றார்.
எதிர்நோக்குடன் வாழ்வது என்பது நிலையான வாழ்க்கையை வாழ்வதற்கு சமம் என்று எடுத்துரைத்த சகோதரி ரீவா அவர்கள், “எப்படி ஓடவேண்டும் என்று அறியாதவர் எங்கு ஓட வேண்டும் என்பதையும் அறியாதவராகவே இருக்கின்றார்” என்ற தூய அகுஸ்தீனாரின் வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி திருஅவை மற்றும் உலகத்தை நோக்கி ஓட எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நிலைவாழ்வு நமக்கு முன் உள்ளது அதனை முழுமையாக நம்புபவர்கள், நம்பாதவர்கள், என மனிதகுலம் அனைத்திற்கும் முன்னால் அது உள்ளது என்றும், குறுகிய சாதாரணமானவற்றிற்காக அல்ல மாறாக, என்றும் வாழும் உண்மையான நிலைவாழ்விற்காக நாம் உழைக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
எபிரேயத்தில் டிக்வா என்று என்றழைக்கப்படும் எதிர்நோக்கானது நூல் அல்லது கயிறு எனப் பொருள்படும் காவ் என்ற அடிப்படை வேர்ச்சொல்லில் இருந்து உருவானது என்றும், இரு மனிதர்களை இணைக்க பயன்படும் இந்த காவ் என்னும் கயிறானது தனது பழைய வாழ்வில் வேரூன்றப்பட்ட மனிதன் நிகழ்காலத்தை வாழும் மனிதன் எதிர்காலத்தை நோக்கி தன்னை செலுத்த முடியும் என்பதை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார் அருள்சகோதரி ரீவா.
அடிப்படை வேர்களை இழக்காதீர்கள் என்றும் எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கை கொள்ளாதீர்கள் என்றும் வலியுறுத்திய சகோதரி ரீவா அவர்கள், 1922-ஆம் ஆண்டு ஜோர்கோ தி சிரிகோ என்னும் கிரேக்கரால் வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்ட ஊதாரி மைந்தன் உவமையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓவியத்தைக் குறித்தக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
இறுதியா திருநற்கருணை ஆராதனை பற்றியும் சால்வதோர் டாலி என்பவர் வரைந்த அன்னை மரியாளின் மரியின் இயேசு அமர்ந்திருப்பது போன்ற ஓவியம் பற்றியக் கருத்துக்களையும் அதில் சித்தரிக்கப்பட்டுள்ள உருவங்களுக்கான பொருளையும் பகிர்ந்துகொண்டார்.
தியானத்தின் இறுதியில் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் இருந்து யூபிலி ஆண்டு சிலுவையை சுமந்தபடி திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் முன்செல்ல திருப்பீடத்தில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்பத்தார் பவனியாக, புனித கதவின் வழியாக வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலுக்குள் நுழைந்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்