தொகையிசை என்பது தூய ஆவியால் வழிநடத்தப்படும் விசுவாசத்தின் உருவகம
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தொகையிசை என்பது தூய ஆவியால் வழிநடத்தப்படும் விசுவாசத்தின் உருவகம் என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
புனிதம் நிறைந்த இசை வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜொவானி பியர்லூய்ஜி தா பலெஸ்திரீனா-வின் 500-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், அவருக்கு அஞ்சலி செலுத்தியபோது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.
ஜூன் 18, புதன்கிழமை மாலை, திருப்பீடத்தில் தொமினிகோ பார்த்தோலூச்சி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில், அதன் பங்கேற்பாளர்களிடம் உரையாற்றிய திருத்தந்தை, பலெஸ்திரீனா இசையின் ஆன்மிக மற்றும் வழிபாட்டு முக்கியத்துவத்தை இறைவேண்டல் மற்றும் ஒன்றிப்பின் காலத்தால் அழியாத வெளிப்பாடு என்று விவரித்தார்.
“கிரகோரியன் இசையால் ஈர்க்கப்பட்ட அவரது புனிதத்துவம் வாய்ந்த இசையமைப்புகள், ஆன்மாவை உயர்த்தி, தெய்வீக மறைபொருளுக்குக் குரல் கொடுக்கும் வகையில் இசையையும் வழிபாட்டையும் இணைக்கின்றன” என்று அவர்களிடம் உரைத்தார் திருத்தந்தை.
எதிர்-சீர்திருத்தத்தின் போது இசையமைப்பாளரின் பங்கை நினைவு கூர்ந்த திருத்தந்தை, இசை மூலம் விசுவாசிகளின் ஆன்மிக வாழ்க்கையைப் புதுப்பித்து ஆழப்படுத்த திருஅவையின் முயற்சிகளுக்கு பலெஸ்திரீனா எவ்வாறு பங்களித்தார் என்பதையும் தனது உரையில் எடுத்துக்காட்டினார்.
தொகையிசை (Polyphony) என்பது வெறும் இசை நுட்பம் மட்டுமல்ல; அது இறையியல் அர்த்தத்துடன் நிறைவுற்ற ஒரு வடிவம். அது புனித உரையை எடுத்து, பொருத்தமான மெல்லிசையால் அதை அணிவிக்கிறது என்றும், இதனால் அது விசுவாசிகளின் புரிதலை சிறப்பாக அடைய முடியும் என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
மேலும் பல குரல்கள், ஒவ்வொன்றும் அதனுடனான மெல்லிசைப் பாதையுடன், இணக்கமான இடைக்கணிப்பில் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதையும் அவர்களுக்கு விவரித்தார் திருத்தந்தை.
வேற்றுமையில் இந்த மாறும் ஒற்றுமை, தூய ஆவியாரின் வழிகாட்டுதலின் கீழ் நமது பகிரப்பட்ட விசுவாசப் பயணத்திற்கான ஒரு உருவகமாகும் என்றும் தொடர்ந்து கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்