MAP

“லியோன் தெ பெரு” ஆவணப்படம் வெளியீடு

பெருவில் ஏறக்குறைய 22 ஆண்டுகள் மறைப்பணியாளராகப் பணியாற்றிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் பெரு மக்களால் “பெருவியன் திருத்தந்தை” என்று அன்பாக அழைக்கப்படுகின்றார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறைப்பணி வாழ்வை முன்னிலைப்படுத்தி வத்திக்கான் ஊடகத்தாரால் தயாரிக்கப்பட்ட “லியோன் தெ பெரு” (León de Perú) என்னும் ஆவணப்படமானது ஜூன் 20, வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது.

ஜூன் 20, வெள்ளிக்கிழமை மாலை உரோம் உள்ளூர் நேரம் மாலை 4  மணியளவில் León de Perú” என்னும் ஆவணப்படமானது வத்திக்கானில் (Filmoteca vaticana) திரையிடப்பட்டு 5 மணியளவில் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தால் பன்னாட்டு அளவில் வெளியிடப்பட்டது.  

பெருவின் மறைப்பணித் தளங்களான Lima, Callao, Trujillo, Chichlayo, Chulucanas, Piura ஆகிய பகுதிகளில் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் ஆற்றிய மறைப்பணியினை அங்கு வாழ்வோரின் குரல் பதிவுகளாகவும், படங்களாகவும் இடங்களாகவும், சான்றுகளாகவும், காணொளி மற்றும் புகைப்படங்களாகவும் தொகுத்து இந்த ஆவணப்படமானது தயாரிக்கப்பட்டுள்ளது.

இசை, மகிழ்ச்சி, விருந்தோம்பல் மற்றும் இயற்கை அழகு மிகுந்த மச்சு பிச்சுவின் இயற்கை அழகு, சியரா, செல்வா என்னும் சுற்றுலாத்தளங்களைக் கொண்ட பகுதியாக திகழ்ந்த பெருவில் ஏறக்குறைய 22 ஆண்டுகள் மறைப்பணியாளராகப் பணியாற்றிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் பெரு மக்களால் “பெருவியன் திருத்தந்தை” என்று அன்பாக அழைக்கப்படுகின்றார்.

சுற்றுலாத்தளமாகத் திகழ்ந்தாலும், வறுமையினால் பாதிக்கப்பட்ட இடமாகவும் திகழ்ந்த பெருவின் பகுதிகளில் மனமகிழ்வுடனும் அர்ப்பண உணர்வுடனும் பணியாற்றிய திருத்தந்தையின் மறைப்பணி செயல்களை இந்த ஆவணப்படமானது எடுத்துரைக்கின்றது.

மனிதநேயம், மகிழ்ச்சியான வாழ்க்கை, பகிரும் குணம், மற்றவர்களுக்கு தன்னை அர்ப்பணிக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்ட திருத்தந்தை அவர்கள், அகுஸ்தீன் சபை மறைப்பணியாளராக ஏறக்குறைய 22 ஆண்டுகள் அங்கு பணியாற்றி மக்களோடு மக்களாக தன்னை இணைத்தவர் என்பதை இந்த ஆவணப்படம் வலியுறுத்துகின்றது.

பாலியல் ரீதியான பாதிக்கப்பட்ட குழுக்கள், கடத்தப்பட்ட அல்லது விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்கள் போன்றோரின் பிரச்சனைகளைக் கேட்கவும், அவர்கள் தங்களது நிலையிலிருந்து வெளியேறவும் உதவிய திருத்தந்தையின் செயல்கள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் கடைகளைத் திறக்கவும் தியானங்களை ஏற்பாடு செய்த நிகழ்வுகளையும் இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கின்றது.

எல் நினோவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேற்று நீரில் இறங்கி அம்மக்களுக்குப் பணியாற்றியது, திருநற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல் திருவருளடையாளங்களை அம்மக்களுடன் இணைந்து சிறப்பித்தது, வயதான தம்பதிகள் மற்றும் எளிய குடும்பங்களின் வீடுகளில் மதிய உணவு உண்டது, ஞாயிற்றுக்கிழமை திருவிருந்தில் பங்கேற்க அவர்களை ஒலிபெருக்கி கொண்டு அழைக்க சுற்றுப்புறங்கள் வழியாகச் சென்றது என அனைத்தும் உள்ளடக்கியதாக இந்த ஆவணப்படம் திகழ்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜூன் 2025, 12:20