செப்டம்பர் மாதத்தில் அருளாளர் கார்லோ அகுதீஸ்க்கு புனிதர் பட்டம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அருளாளர் கார்லோ அக்குதீஸ் மற்றும் பியர்ஜார்ஜோ ஃபிரசாத்தி இருவரும் வருகின்ற செப்டம்பர் 7 ஞாயிறன்று புனிதர்களாக உயர்த்தப்பட உள்ளனர்.
ஜூன் 13, வெள்ளிக்கிழமை காலை திருஅவையின் அருளாளர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாகக் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின் கர்தினால்கள் அவையின் சாதாரண பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று வழிநடத்தியபோது இவ்வாறு ஒப்புதல் அளித்துள்ள திருத்தந்தை அவர்கள், அருளாளர்கள் புனிதர்களாக உயர்த்தப்பட உள்ள நாளினையும் நிர்ணயித்துள்ளார்.
செப்டம்பர் 7 ஞாயிறு அருளாளர்கள் காலோ அகுதீஸ் மற்றும் பியர் ஜார்ஜோ ஃபிரசாத்தில் ஆகியோரின் புனிதர் பட்டமளிப்பு விழா திருப்பலி நடைபெறும் என்று தெரிவித்தார்.
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2024 ஆம் ஆண்டு நவம்பர் 20 புதன் மறைக்கல்வி அன்று பியர் ஜியோர்ஜியோ, கார்லோ அகுதீஸ் ஆகியோருக்கு புனிதர் பட்டம் வழங்குவதை அறிவித்தார். 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று நடைபெற இருந்த புனிதர் பட்ட திருப்பலியானது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், இந்நிகழ்வினை செப்டம்பர் மாதம் 7 ஞாயிறன்று நிகழ்த்த அனுமதி அளித்துள்ளார்.
முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கையை நடத்திய வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களான பிரசாத்தி, கார்லோ இருவரையும் புனிதர்களின் பட்டியலில் சேர்க்கத் தேர்வு செய்துள்ளதாகத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், கிறிஸ்துவின் மீதான அன்பிலும், அந்த அன்பை அவர்களோடு இருந்தவர்களுக்கு வழங்கும் திறனிலும் ஒன்றுபட்டுள்ளனர் என்றும் எடுத்துரைத்தார்.
1915- ஆம் ஆண்டு ஒட்டோமான் பேரரசில் ஆர்மீனிய இனப்படுகொலையின் போது இறந்த மறைசாட்சியாளரான ஆர்மீனிய கத்தோலிக்க பேராயர் இக்னேஷியஸ் ஷோக்ரல்லா மலோயன், மற்றும் ஜப்பானியர்களால் விதிக்கப்பட்ட தடையை மீறி தனது மறைப்பணியைத் தொடர்ந்ததற்காக 1945-ஆம் ஆண்டு மறைசாட்சியாக இறந்த பொதுநிலையினர் பீட்டர் டு ரோட் உட்பட ஏழு அருளாளர்களுக்கு வருகின்ற அக்டோபர் 19 ஞாயிறு புனிதர் பட்டம் வழங்க அனுமதி அளித்துள்ளார் திருத்தந்தை. பொதுநிலையினரான பீட்டர் பாப்புவா நியூகினியில் இருந்து வரும் முதல் புனிதர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.
அக்டோபரில் புனிதர் பட்டம் பெறவுள்ளவர்களில் மூன்று அருள்சகோதரிகளும் அடங்குவர். அவர்கள் வெரோனாவின் இரக்கத்தின் சகோதரிகள் சபையின் நிறுவனரான அருள்சகோதரி வின்சென்சா மரியா போலோனி, இயேசுவின் ஊழியர்கள் சபையின் நிறுவனரான வெனிசுலாவைச் சேர்ந்த அருள்சகோதரி மரியா டெல் மான்டே கார்மெலோ ரெண்டில்ஸ் மற்றும் கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் புதல்வியர் சபையைச் சார்ந்த அருள்சகோதரி மரியா ட்ரோன்காட்டி என்பவர்களாவர்.
பொம்பே அன்னை மரியா திருத்தலத்தின் நிறுவனரான பர்த்தலோ லோங்கோ, வெனிசுவெலா மருத்துவரும் பிரான்சிஸ்கன் முன்றாம் சபை உறுப்பினருமான José Gregorio Hernández Cisneros ஆகியோரும் இப்புனிதர்கள் பட்டியலில் இடம்பெற உள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்