MAP

விமான விபத்து நடந்த இடத்தில் தீயணைப்புப் படையினர் விமான விபத்து நடந்த இடத்தில் தீயணைப்புப் படையினர்  (ANSA)

இந்திய விமான விபத்திற்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி

242 பேர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ள நிலையில், B.J. மருத்துவக் கல்லூரி மாணவர் தங்கும் விடுதியின் மீது விமானம் விழுந்ததில் அங்குள்ள மாணவர்கள் சிலரும் உயிரிழந்திருக்கலாம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஜூன் 12, வியாழனன்று இடம்பெற்ற விமான விபத்து குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் அனுதாபங்களையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 14ஆம் லியோ.

242 பேருடன் இலண்டன் நோக்கிக் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியதில் 241 பேர் உயிரிழந்தனர்.  

இவ்விபத்து குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை, இவ்விபத்தில் பலியானவர்களுக்காக இறைவேண்டலை மேற்கொள்வதாகவும் தன் அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார்.

இந்த விபத்தல் பாதிக்கப்பட்டோர் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்காகவும், உயிரிழந்துள்ள மக்களுக்காகவும் தன் செப உறுதியை எடுத்துரைத்துள்ள திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் அவர்களின் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் தன் செய்தியில் கூறியுள்ளார்.

இந்த ஏர்இந்தியா விமானத்தில் பயணம் செய்த 242 பேருள் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்.

242 பேரில் இரு விமானிகள், 10 விமானப் பணியாளர்கள் உட்பட 13 குழந்தைகளும், இரு பச்சிளம் குழந்தைகளும் இருந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தவர்களுள் 169 பேர் இந்தியர், 53 பேர் பிரிட்டானியர், 7 பேர் போர்த்துக்கல் நாட்டவர் மற்றும் ஒருவர் கானடா நாட்டைச் சேர்ந்தவர்.

242 பேர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ள நிலையில், விமான நிலையத்துக்கு அருகில் உள்ள B.J. மருத்துவக் கல்லூரி மாணவர் தங்கும் விடுதியின் மீது விமானம் விழுந்ததில் அங்குள்ள மாணவர்கள் சிலரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அகமதாபாத்தின் உயர் காவல்துறை அதிகாரி Kanan Desai  உரைக்கையில், விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 265 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியிருந்தோரில் 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து நடந்த இடத்தை வெள்ளிக்கிழமையன்று சென்றுப் பார்வையிட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவு தன் இதயம் நொறுங்கியுள்ளதாகவும், இவ்விபத்து மிகப்பெரும் சோகத்தைத் தந்துள்ளதாகவும் எடுத்துரைத்தார்.

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிர் தப்பிய ரமேஷ் விஸ்வாஸ் குமார் அவர்களையும் மருத்துவமனையில் சென்று சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஜூன் 2025, 13:26