MAP

உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை தலத்திருஅவை தலைவரான, பேராயர் Svjatoslav Shevchuk  உடன் திருத்தந்தை 14-ஆம் லியோ உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை தலத்திருஅவை தலைவரான, பேராயர் Svjatoslav Shevchuk உடன் திருத்தந்தை 14-ஆம் லியோ 

நம்பிக்கை என்பது பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு புதையல்

ஆகட்டும் என்ற வார்த்தையின் வழியாக மனுக்குலத்தின் மீட்பிற்கு வழிவகுத்த அன்னை மரியாவைப்போல, ஆகட்டும் என்று நம்பிக்கையுடன் நாம் கூறும் வார்த்தையானது அமைதி மற்றும் எதிர்நோக்கின் புதிய எல்லைகளை அனைவருக்கும் திறக்க அனுமதிக்கும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நம்பிக்கை என்பது பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு புதையல் என்றும், ஒவ்வொரு காலமும் அதனதன் துன்பங்கள், துயரங்கள் மற்றும் சவால்களைக் கொண்டுவருகிறது, கடவுள் மீதான நம்பிக்கையிலும் அவரது கரங்களில் நம்மை அர்ப்பணிக்கும் மனநிலையில் வளர வாய்ப்புகளைத் தருகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூன் 28, சனிக்கிழமை திருஅவையில் சிறப்பிக்கப்படும் உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை தலத்திருஅவையினருக்கான யூபிலியை முன்னிட்டு அதன் திருப்பயணிகளை தூய பேதுரு பெருங்கோவிலில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள்,  அத்தலத்திருஅவையின் தலைவரான, பேராயர் Svjatoslav Shevchuk ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், பொதுநிலையினர் என அனைவரையும் வாழ்த்தினார்.

யூபிலி ஆண்டில் மேற்கொண்டிருக்கும் இத்திருப்பயணமானது நம்பிக்கையைப் புதுப்பிக்கவும், உரோம் ஆயருடனான பிணைப்பையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தவும், ஏமாற்றமடையாத எதிர்நோக்கிற்கு சான்றளிக்கவும் வழிவகுக்கின்றது என்றும், இத்தகைய நமது விருப்பத்தின் அடையாளமானது, தூய ஆவியாரால் நம் இதயங்களில் ஊற்றப்பட்ட கிறிஸ்துவின் அன்பிலிருந்து பிறக்கிறது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

நமது நிகழ்காலத்தில் துன்பங்கள் பல இருந்தபோதிலும், நம் வாழ்நாள் முழுவதும் இந்த எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நாம் மாற யூபிலி ஆண்டானது நமக்கு அழைப்புவிடுக்கின்றது என்றும், புனிதக் கதவு, மறைசாட்சிகள் மற்றும் திருத்தூதர்களின் கல்லறைகளைக் கடந்து செல்வது என்பது நமது அன்றாட வாழ்வின் பயணத்தை, நிலைவாழ்வை நோக்கிச் செல்லும் பயணத்தை அடையாளப்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

கடவுள் நமக்கு அளிக்கும் நிலைவாழ்வில் அவர் நம்முடைய கண்ணீர் அனைத்தையும் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன” என்ற திருவெளிப்பாடு (21:4) நூலின் வரிகளை மேற்கோள்காட்டினார் திருத்தந்தை.

போர்ச் சூழல்களால் உக்ரைன் மக்களின் நம்பிக்கை கடுமையாக சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் “கடவுள் நம்முடன் இருக்கிறார், அவர் தனது இறுதி வார்த்தையை உச்சரிப்பார், வாழ்வானது இறப்பை வெல்லும் என்று நம்புவதே உண்மையான நம்பிக்கையாகும்” என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஆகட்டும் என்ற வார்த்தையின் வழியாக மனுக்குலத்தின் மீட்பிற்கு வழிவகுத்த அன்னை மரியாவைப்போல, ஆகட்டும் என்று நம்பிக்கையுடன் நாம் கூறும் வார்த்தையானது அமைதி மற்றும் எதிர்நோக்கின் புதிய எல்லைகளை அனைவருக்கும், குறிப்பாக துன்புறும் அனைவருக்கும் திறக்க அனுமதிக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஜூன் 2025, 14:02