ஆழமான ஒற்றுமையின் அடையாளத்தை எடுத்துரைக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
கான்ஸ்டாண்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையின் பிரதிநிதிகள் குழுவினர் திருத்தூதர்களான புனித பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவை சிறப்பிக்க வத்திக்கான் வந்திருப்பது, இரு திருஅவைகளுக்கு இடையே நிலவும் ஆழமான ஒற்றுமையின் அடையாளத்தை எடுத்துரைக்கின்றது என்றும், திருத்தூதர்களும் சகோதரர்களுமான தூய பேதுரு மற்றும் அந்திரேயாவின் சகோதரத்துவப் பிணைப்பை பிரதிபலிக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூன் 29, ஞாயிறன்று சிறப்பிக்கப்பட உள்ள திருத்தூதர்களான புனித பேதுரு, புனித பவுல் பெருவிழாவில் கலந்துகொள்ள வத்திக்கானுக்கு வந்திருந்த கான்ஸ்டாண்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையின் பிரதிநிதிகள் குழுவினரை, ஜூன் 28, சனிக்கிழமை சந்தித்தபோது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
பல நூற்றாண்டுகளாக ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் தவறான புரிதலுக்குப் பிறகு, உரோம் மற்றும் கான்ஸ்டான்டிநோபிள் திருஅவைகளுக்கு இடையே உண்மையான உரையாடலை மீண்டும் தொடங்கியவர்கள் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை அதனாகொரஸ் என்றும், அவர்கள் எடுத்த துணிச்சலான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட நடவடிக்கைகளின் வழியாக கிறிஸ்தவ ஒன்றிப்பு சாத்தியமானது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
உரோம் மற்றும் கான்ஸ்டான்டிநோபிளின் வழித்தோன்றல்கள் அனைவரும் அதே நல்லிணக்கப் பாதையை உறுதியுடன் பின்பற்றி, நமது நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளனர் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத்திருப்பலி மற்றும் புதிய திருத்தந்தை 14ஆம் லியோவாகிய தனது தலைமைத்துவ பதவியேற்பு திருப்பலி ஆகியவற்றில் முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்கள் பங்கேற்று, கத்தோலிக்க திருஅவைக்கு அளித்த உண்மையான நெருக்கத்தின் சாட்சியத்தையும் நினைவுகூர்ந்தார்.
இதுவரை ஏற்பட்ட முன்னேற்றத்தை நன்றியுடன் நினைத்துப் பார்த்து, இரண்டு திருஅவைகளுக்கு இடையே, முழுமையான மற்றும் புலப்படும்படியான ஒற்றுமையை மீட்டெடுக்கும் முயற்சியில் விடாமுயற்சியுடன் ஈடுபடுவதற்கான தனது விருப்பத்தை உறுதியளித்த திருத்தந்தை அவர்கள், கடவுளின் உதவி, மரியாதைக்குரிய செவிசாய்த்தல் மற்றும் உடன்பிறந்த உணர்வுடன் கூடிய உரையாடலுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு வழியாக மட்டுமே இந்த இலக்கை அடைவது சாத்தியமாகும் என்றும் மொழிந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்