நம்பிக்கையில் உயர்ந்த மனிதர் அருளாளர் கர்தினால் Iuliu Hossu
மெரினா ராஜ் - வத்திக்கான்
அருளாளர் கர்தினால் Iuliu Hossu அவர்களின் ஆழமான எதிர்நோக்கானது, அவரது உயர்ந்த மேய்ப்புப்பணியில் வெளிப்பட்டது என்றும், கடவுளின் பணியில் தீய ஆவியின் வாயில்கள் வெற்றி பெறாது என்பதை நன்கு அறிந்து, நம்பிக்கையில் உயர்ந்த மனிதராக அவர் விளங்கினார் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஜூன் 2, திங்கள்கிழமை மாலை, அருளாளர் கர்தினால் Iuliu Hossu (1885–1970) அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடியிருந்தவர்களுக்கு எடுத்துரைத்த செய்தியில் இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
கிரேக்க-கத்தோலிக்கத்தைச் சார்ந்த க்ளூஜ்-கெர்லா மறைமாவட்ட ஆயரும், ருமேனியாவில் கம்யூனிச துன்புறுத்தலின்போது மறைசாட்சியாக இறந்தவருமான அருளாளர் கர்தினால் Iuliu Hossu அவர்கள், 1969ஆம் ஆண்டு ஏப்ரல் 28, அன்று திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டவர், உரோம் தலத்திருஅவைக்கு நம்பிக்கையுள்ளவராக இருந்ததால் சிறையில் அடைக்கப்பட்டவர் என்றும் கூறினார் திருத்தந்தை.
நம்பிக்கையின் நிறைவான சான்றாக அருளாளரது வாழ்க்கையும், செபமும், பிறரோடு கொண்டிருந்த உறவும் இருந்தது என்றும், உரையாடலின் மனிதராகவும், எதிர்நோக்கின் இறைவாக்கினராகவும் இருந்த கர்தினால் லூலியு அவர்கள் 2019ஆம் ஆண்டு ஜூன் 2, அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அருளாளராக உயர்த்தப்பட்டார் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
அருளாளர் பட்ட நிகழ்வின்போது கர்தினால் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை வாசிக்கும்போது எடுத்துரைத்த வரிகளான, "மன்னிப்பை வழங்கவும், அனைவரையும் மனமாற்றம் பெறச் செய்ய செபிக்கவும், கடவுள் நம்மை இந்த துன்ப இருளில் அனுப்பியுள்ளார்” என்பதை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள், இவ்வரிகள் மறைசாட்சிய ஆற்றலை வெளிப்படுத்துகின்றன என்றும் கூறினார்.
கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, வெறுப்பற்ற நிலை, இரக்கத்தின் ஆற்றல், ஆகியவை ஒருவரின் துன்பத்தை அன்பாக மாற்றும் ஆற்றல் பெற்றது என்றும், அந்த வார்த்தைகள் மன்னிப்பின் வழியாக வெறுப்பை வெல்லவும், மாண்புடனும் துணிவுடனும் ஒருவரின் நம்பிக்கையை வாழ்வதற்கான ஓர் இறைவாக்கு அழைப்பாக இருக்கின்றன என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
ருமேனியாவின் யூதர்களுக்காக அருளாளர் செய்தது, அனைத்து ஆபத்துகள் மற்றும் துயரங்கள் இருந்தபோதிலும் தனது அண்டை வீட்டாரைப் பாதுகாக்க அவர் எடுத்த முயற்சிகள் போன்றவை அருளாளரை சுதந்திரம், துணிவு, உயர்ந்த தியாகம் மற்றும் தாராள மனப்பான்மையின் மாதிரியாக ஆக்குகின்றன என்றும், "நமது விசுவாசமே நமது வாழ்க்கை" என்ற அவரது குறிக்கோள் நம் ஒவ்வொருவரின் குறிக்கோளாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்