ஓர் ஆழமான நற்செய்தியின் மனிதர் திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தாழ்ச்சியான செயல்முறைகள், உறுதியான செயல்பாடுகள் மற்றும் துணிச்சலான முடிவுகளுடன் மாற்றங்கள் தொடங்குகின்றன என்பதை நமக்குக் கற்பித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும், ஓர் ஆழமான நற்செய்தியின் மனிதர் அவர் என்றும் வலியுறுத்தியுள்ளனர் உலக கத்தோலிக்க பெண்கள் அமைப்புக்களின் ஒன்றியத்தார்.
மே 5, திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள உலக கத்தோலிக்க பெண்கள் அமைப்புக்களின் ஒன்றியமானது (WUCWO) பெண்களாகியத் தங்களை நம்பியதற்கு திருத்தந்தைக்கு நன்றி என்று கூறி, பெண்கள் இல்லாத மனுக்குலம் தனிமை, சோகம், அனைத்து வகையான தீங்குகளை வளர்க்கும் வறண்ட நிலமாக துயரினைத் தருகின்றது என்பதை அதிகமாக எடுத்துரைத்தவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும் குறிப்பிட்டுள்ளது.
2023 -ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்க வந்த இவ்வமைப்பின் ஏறக்குறைய 1,500 பெண்களுக்கு வழங்கிய செய்திகளைத் தாங்கள் ஒருபோதும் மறக்க முடியாது என்று நினைவுகூர்ந்துள்ள அவ்வமைப்பானது, தங்களது குரலுக்கு செவிசாய்க்கின்ற, பாராட்டிய, புரிந்துகொண்ட ஒருவருடன் பயணிப்பதாக திருத்தந்தையின் தலைமைத்துவக் காலத்தில் தாங்கள் இருந்ததாகவும் பகிர்ந்துள்ளனர்.
பெண்கள் இல்லாத மனித குலம் தனிமை நிறைந்தது என்பதை தொடக்க நூலில் நாம் காண்கின்றோம், பெண் இல்லாத ஆண், மனித குலம், கலாச்சாரம் ஆகிய அனைத்தும் தனியாக இருக்கக்கூடியது என்பதை வலியுறுத்தியவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்று நினைவுகூர்ந்து அவருக்கு நன்றி நிறைந்த மனதுடன் தங்களது செய்தியை பகிர்ந்துள்ளனர் உலக கத்தோலிக்க பெண்கள் அமைப்புக்களின் ஒன்றியத்தார்.
மகிழ்ச்சி மற்றும் எளிமையுடன் நடக்கவும், மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களைப் பராமரிக்கவும், வாழ்வின் பயணத்தில் ஒரு மறைப்பணியாளராக திருஅவையில் இருக்கவும் திருத்தந்தை பிரான்சிஸ் நமக்குக் கற்றுக் கொடுத்தார் என்றும், எதிர்நோக்கின் இறைவாக்கினராக வேறுபாடுகளின்றி அனைவரையும் இறைத்தந்தையின் இரக்கத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவர ஊக்குவித்தவர் என்றும் பகிர்ந்துள்ளது அவ்வமைப்பு.
உலக அமைதி, உடன்பிறந்த உணர்வு, நமது பொதுவான இல்லத்தை பராமரித்தல் போன்றவற்றிற்காக அயராது உழைத்தவர் என்றும், குடும்பங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, மற்றும் மனித வாழ்க்கையை ஆதரித்தவர் என்றும் வலியுறுத்தியுள்ள அவ்வமைப்பானது திருத்தந்தையின் நெருக்கம், மென்மை, புன்னகை ஆகியவை போரினால் பாதிக்கப்பட்ட உலகில் இறையரசின் அடையாளங்களாக இருந்தன என்றும் நினைவுகூர்ந்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்