MAP

யூத கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் யூத கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் 

யூத சமூகத்திற்கு பாதுகாப்புக் கவசமாகச் செயல்பட்ட திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு யூத சமுதாயத்திற்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பாகும் என்பதை சுட்டிக்காட்டினார் வத்திக்கானுக்கான உலக யூத அவையின் பிரதிநிதி எய்ஸ்னர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

யூத விரோதப் போக்கை எப்போதும் கண்டித்து, எண்ணற்ற யூத சமூகங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஞானத்தையும், நட்புணர்வையும், தெளிவான ஒழுக்கரீதி நிலைப்பட்டையும் இந்நாட்களில் யூத உலகம் இழந்து நிற்பதாக அறிவித்தார் உலக யூத அவையின் வத்திக்கானுக்கான பிரதிநிதி.   

யூத விரோதப் போக்கைக் கண்டிப்பதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எப்போதும் தயங்கியதில்லை என்ற உலக யூத அவையின் பிரதிநிதி விக்டர் எய்ஸ்னர் அவர்கள், யூத விரோதப் போக்கு அதிகரித்துவரும் இந்த காலக்கட்டத்தில் திருத்தந்தை அதற்கு எதிராகக் குரல் எழுப்பியதோடு, ஒவ்வொரு மனிதனின் மாண்பும் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசியல் மற்றும் மதத் தலைவர்களை வலியுறுத்தி வந்தார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

கத்தோலிக்க திருஅவைக்கும் யூத சமூகங்களுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்த அனைத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றினார் என்ற எய்ஸ்னர் அவர்கள், வருங்காலத்திற்கான கடமையுணர்வுடன் இருதரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற அழைப்பை விடுத்ததுடன் அதனை நிறைவேற்றுவதில் திருத்தந்தை கவனம் செலுத்தினார் என்பதையும் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு யூத சமுதாயத்திற்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பாகும் என்பதையும் சுட்டிக்காட்டினார் வத்திக்கானுக்கான உலக யூத அவையின் பிரதிநிதி எய்ஸ்னர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாரம்பரியத்தை கௌரவிப்பதற்கான சிறந்த வழி, அவர் வழியில் கலந்துரையாடலையும், மாண்பை மதிப்பதையும், அனைத்து மத அங்கத்தினர்களுடன் அமைதியை பாதுகாப்பதுமாகும் என மேலும் உரைத்தார் அவர்.

சமூக நீதிக்கும் மனித மாண்புக்கும் தன்னை அர்ப்பணித்த ஓர் ஆன்மீகத் தலைவர் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் புகழ்ந்தார் உலக யூத அவையின் பிரதிநிதி எய்ஸ்னர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 மே 2025, 16:24